மியன்மாரில் சிக்கித் தவித்த 6 இந்தியர்கள் மீட்பு
வேலை மோசடியில் சிக்கிய இந்தியர் அறுவர் மீட்கப்பட்டு, விரைவில் தாய்நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளதாக மியன்மாரில் உள்ள இந்தியத் தூதரகம் சனிக்கிழமையன்று (டிசம்பர் 14) தெரிவித்தது.
இதனையடுத்து, கடந்த ஜூலை மாதத்திலிருந்து மட்டும் அவ்வாறு மீட்கப்பட்டு, இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டோரின் எண்ணிக்கை 101ஆக உயர்ந்துள்ளது.
மியன்மார் – தாய்லாந்து எல்லைப் பகுதியான மியவாடியில் தீவிரமாகச் செயல்படும் அனைத்துலக மோசடிக் கும்பலிடம் சிக்கிக்கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று மியன்மாருக்கான இந்தியத் தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலியான வேலைகளால் ஈர்க்கப்படும் அவர்கள், பின்னர் மோசடியில் ஈடுபடும் நிறுவனங்களிடம் இணைய அடிமைகளாகச் சிக்கிக்கொள்கின்றனர்.
மியவாடிப் பகுதியில் வேலை என யாரும் கூறினால், தூதரகங்களை ஆலோசிக்காமல் அதனை ஏற்கக்கூடாது என்று தனது எக்ஸ் ஊடகப் பக்கம் வழியாகத் தூதரகம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
“மியவாடிக்குத் தெற்கிலுள்ள ஹுபா லூ (Hpa Lu) பகுதி இந்தியர்கள் அதிகம் கடத்தப்படும் புதிய இடமாக உருவெடுத்துள்ளது. அவர்கள் வேலை ஆசை காட்டி, தாய்லாந்து வழியாக அங்குக் கடத்தப்படுகிறார்கள்,” என்று தூதரகம் விவரித்துள்ளது.
அத்துடன், மோசடி முகவர்களாக நம்பப்படுவோர் முகவைகள், குற்றச் செயல்கள் இடம்பெறும் வளாகங்கள், தொலைபேசி எண்கள் உள்ளிட்ட விரிவான, புதிய பட்டியலையும் இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ளது.
இதனிடையே, வெளிநாடுகளிலிருந்து போலி வேலைவாய்ப்புகளை வழங்கும் இணையத்தளங்களை முடக்க வேண்டும் என்றும் அத்தகைய மோசடிகளில் ஈடுபடுவோர்க்குக் கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் வெள்ளிக்கிழமையன்று இந்திய நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.
வேலை தருவதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்பட்ட 1,167 இந்தியர்கள் கம்போடியாவிலிருந்தும் 497 பேர் மியன்மாரிலிருந்தும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், கம்போடியா, லாவோஸ், மியன்மார் போன்ற தென்கிழக்காசிய நாடுகளுக்கு வேலை தேடிச் செல்வோர் கவனமாக இருக்க வேண்டும் என தமிழகத்திற்கான புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த திரு எம் ராஜ்குமார் வலியுறுத்தி இருக்கிறார்.
“இந்திய வெளியுறவு அமைச்சின் அங்கீகாரம் பெற்ற ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் மூலமே வெளிநாட்டு வேலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை உறுதிசெய்துகொள்ள வேண்டியது அவசியம்,” என்றார் அவர்.