இளம்பெண்ணை ஏமாற்றிய ஆசிரியரை துப்பாக்கி முனையில் கடத்தி திருமணம் செய்து வைத்த உறவினர்கள்

பீகார் மாநிலம், பகுசராய் நகரைச் சேர்ந்தவர் அவினாஷ். பட்டதாரி ஆன இவர் அந்த மாநிலத்தின் ஆசிரியர் தகுதித்தேர்வுக்குத் தயாராகி வந்தார். இந்நிலையில் லகிசராய் நகரைச் சேர்ந்த குஞ்சம் என்பவர் பகுசராய் நகரில் உள்ள தனது அக்கா வீட்டுக்குப் படிக்க வந்தார்.

அப்போது அவினாசை சந்தித்துப் பழகி வந்தார். நாளடைவில் இது காதலாக மாறியது. சுமார் நான்கு ஆண்டுகளாக அவர்கள் இருவரும் நெருங்கிப் பழகி வந்தனர். அவினாஷ் குஞ்சத்தைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஓட்டல்களில் அறை எடுத்து தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று அவினாஷ் அரசு ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அவினாஷிடம் குஞ்சம் கேட்டு உள்ளார். ஆனால், அவர் அந்த இளம்பெண்ணைத் திருமணம் செய்ய மறுத்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குஞ்சம் இதுகுறித்து தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் வழக்கம்போல் சனிக்கிழமை (டிசம்பர் 14) காலை பள்ளிக்கூடத்திற்கு அவினாஷ் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு கார்கள் அவினாசை வழிமறித்தன. பின்னர் அவரைக் காருக்குள் ஏற்றிக்கொண்டு அருகே உள்ள கோவிலுக்குச் சென்றன.

அங்கே தனது உறவினர்களுடன் மணக்கோலத்தில் இருந்த குஞ்சத்தைப் பார்த்து அவினாஷ் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவினாஷின் கால்களைக் கயிற்றால் கட்டிய உறவினர்கள் துப்பாக்கி முனையில் குஞ்சத்துடன் அவருக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைத்தனர்.

அப்போது பெண்ணின் நெற்றியில் குங்குமத் திலகமிட மறுத்த அவினாஷை உறவினர்கள் அடித்து உதைத்தனர். அருகே இருந்த குஞ்சம் அழுது துடித்தார். சினிமா காட்சிகளை மிஞ்சிய இதுதொடர்பான காணொளிக் காட்சிகள் இணையத்தில் பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருமணம் முடிந்த பிறகு அவினாஷ் வீட்டிற்குச் சென்ற குஞ்சத்தை மணமகனின் பெற்றோர் ஏற்க மறுத்து துரத்தி அடித்துள்ளனர். இதுகுறித்து அந்தப் பெண் காவல்துறையிடம் புகார் அளித்துள்ள நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.