அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பதிவும் கட்டாயம்.
நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவை உட்பட இலங்கையில் இயங்கும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தில் பதிவு செய்வதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.
1980 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க தன்னார்வ சமூக சேவை நிறுவனங்கள் (பதிவு மற்றும் கண்காணிப்பு) சட்டத்தின் கீழ் பதிவு இவ்வாறு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் இயங்கும் அல்லது செயற்பட விரும்பும் அனைத்து வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களும் (INGOs) அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
பதிவாளர் நாயகம் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களும் தேசிய செயலகத்தில் மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.
முறையான பதிவு இல்லாமல் செயல்படும் அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இந்த அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
அத்தகைய நிறுவனங்கள் அனைத்தும் தன்னார்வ சமூக சேவை அமைப்புகளின் (பதிவு மற்றும் கண்காணிப்பு) சட்டத்தின் கீழ் தேசிய செயலகத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும் என்று அந்த அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.
அரசாங்க கொள்கைகளுக்கு இணங்க, பணமோசடியை தடுப்பது மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பது தொடர்பாக இலங்கை மத்திய வங்கியுடன் செயலகம் அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளது.
பதிவு நடைமுறையின் படி, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் உரிய ஆவணங்களை செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
அவை பாதுகாப்பு அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சகங்களுக்கு அனுமதி பெற அனுப்பப்படுகின்றன.
அறிவிப்பின்படி, அனுமதி அறிக்கைகள் பெறப்படும் வரை ஆறு மாதங்களுக்கு நிறுவனத்திற்கு தற்காலிக சான்றிதழ் வழங்கப்படும்.
அமைச்சுக்களிடமிருந்து அனுமதி அறிக்கைகளைப் பெற்ற பின்னர், பணிப்பாளர் நாயகம் அறிக்கைகளை சரிபார்த்து, சிக்கல் இல்லை என்றால் பதிவுச் சான்றிதழை வழங்குவார்.
அனுமதி பதிவுகளில் சிக்கல் இருந்தால், பதிவு கோரிக்கை நிராகரிக்கப்படும்.