இந்தியாவுக்கும் ஆசிய பிராந்தியத்துக்கும் ஜனாதிபதி அனுரவிடமிருந்து ஓர் உறுதி!
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இலங்கையின் பிரதேசத்தை பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கு தனது விஜயம் வாய்ப்பாக அமையும் என இலங்கை ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
அண்மைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவிகள் தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது கவனம் செலுத்தினார்.
இதேவேளை, இரு நாடுகளுக்குமிடையிலான கடற்றொழில் பிரச்சினைக்கு நிரந்தரமானதும் நிலையானதுமான தீர்வொன்றை வழங்குவது அவசியமானது என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
அநுர திஸாநாயக்க, இந்தியப் பிரதமரிடம், மீன்பிடித் தொழில்துறையினர் சட்டவிரோதமான முறைகளை தமது மீன்பிடித் தொழிலில் பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதேவேளை, இந்தியாவில் அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பிலும் ஜனாதிபதி கருத்து வெளியிட்டார்.
அந்தச் செயலியில் இந்தியா பெரும் வெற்றியைப் பெற்றுள்ளதால், இலங்கையும் அதே பாதையை பின்பற்றி வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இலங்கையில் அமுல்படுத்தப்படும் வேலைத்திட்டத்திற்கு தனது ஆதரவை வழங்குவதாக இந்திய பிரதமர் உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவும் இந்தியப் பிரதமரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.