இந்திய அதிபர், பிரதமருடன் இலங்கை ஜனாதிபதி திசாநாயக்க சந்திப்பு.
இந்தியா வந்துள்ள இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு, புதுடெல்லியில் உள்ள அதிபர் மாளிகையில் திங்கட்கிழமை (டிசம்பர் 16) சடங்குபூர்வ மரியாதை அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இந்திய அதிபர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து அதிபர் முா்மு, பிரதமா் மோடி ஆகியோரைச் சந்திக்கும் அனுர குமார, புதுடெல்லியில் வா்த்தக நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்க உள்ளாா்.
மேலும், பீகாரில் உள்ள புத்தகயாவுக்கும் செல்ல உள்ளாா். கடந்த செப்டம்பரில் நடைபெற்ற இலங்கை ஜனாதிபதி தோ்தலில் வெற்றிபெற்று அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக அனுர குமார திசாநாயக்க பதவியேற்றாா்.
இலங்கை ஜனாதிபதியை புதுடெல்லி அனைத்துலக விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வரவேற்றார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின், முதல் வெளிநாட்டுப் பயணமாக அனுர குமார டெல்லி வந்துள்ளார்.
ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை இலங்கை ஜனாதிபதி சந்தித்தார். அப்போது, இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், குறிப்பாக இந்தியா – இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
பின்னர் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
”இந்தியாவில் பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டபோது , இலங்கையிலும் அது கொண்டாடப்பட்டது. சென்னை – யாழ்ப்பாணம் இடையே விமானப் பயணச் சேவை, கப்பல் பயணச் சேவை ஆகியவை சுற்றுலாவை பலப்படுத்தி நமது கலாசார உறவுகளை வலுப்படுத்தியுள்ளன.
“நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை படகு சேவைகள் வெற்றிகரமாக தொடங்கப்பட்டதை அடுத்து, இப்போது இந்தியாவின் ராமேசுவரம் மற்றும் தலைமன்னார் இடையே கப்பல் சேவை தொடங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்,” என்று தெரிவித்தனர்.
மேலும், மீனவர்கள் பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறை நோக்கிச் செல்ல இலங்கை ஜனாதிபதியும் தாமும் ஒப்புக்கொண்டதாக பிரதமர் மோடி கூறினார்.
மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் ஆகியோரையும் அனுர குமார தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பு குறித்து ஜனாதிபதி அனுர குமார கூறுகையில், “இந்தியா – இலங்கை வட்டாரப் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். பொருளாதாரம், முதலீடு, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முன்னேற்றம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
“இந்தியா-இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான கூட்டுறவை மேம்படுத்துவது தொடர்பாக இந்தச் சந்திப்பு அமைந்தது,” என்று தெரிவித்துள்ளார்.