நாமலின் பைலை துருவ ஆரம்பித்துள்ள இரகசிய பொலிஸார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எவ்வாறு சட்டப் பட்டம் பெற்றார் என கேள்வி எழுப்பி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்று தொடர்பில் நாமல் ராஜபக்ச பதிலளித்துள்ளார்.
தாம் உட்பட எந்தவொரு பரீட்சையாளருக்கும் , பரீட்சை நேரத்தில் விசேட கவனம் செலுத்தப்படவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.
‘எனக்கு எதிரான பல குற்றச்சாட்டுகளைப் போலவே, பல ஆண்டுகளாக அரசியல் லாபத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் இந்தக் குற்றச்சாட்டுகளும் முற்றிலும் ஆதாரமற்றவை.
இலங்கை சட்டக் கல்லூரியின் நம்பகத்தன்மை, நியாயத்தன்மைக்கு எப்பொழுதும் உயர்ந்த நற்பெயரைக் கொண்டுள்ளமை, இந்தக் குற்றச்சாட்டினால் கடுமையாக பாதிப்பை உருவாக்கியுள்ளது. நான் உட்பட எந்த பரீட்சையாளருக்கும் சிறப்பு கவனம் செலுத்தப்படவில்லை.
எனது சட்டத் தேர்வில் எனக்கு சிறப்பு உதவி அளிக்கப்பட்டது என்ற தவறான எண்ணத்தை இந்த விசாரணை முடிவு தெளிவுபடுத்தும் என நான் நம்புகிறேன். அந்தச் செயல்பாட்டில் எனது முழு ஆதரவையும் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். உண்மை வெல்லும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
தற்போதைய அரசாங்கத்தின் திறமையின்மை மற்றும் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களால் வழங்கப்படும் போலியான கல்வித் தகுதிகள் போன்றவற்றிலிருந்து பொதுமக்களை திசை திருப்பவே இவ்வாறான யுக்திகள் பயன்படுத்தப்படுகின்றன. அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளின் முடிவில், சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது, அரசாங்கமே அதிர்ந்தது. போலியான தகுதிகளுடன் சபாநாயகர் நியமனம் தொடர்பான சர்ச்சை மிகவும் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டிய விடயமாகும் என்றார் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச .