கட்டுப்பாட்டு விலையை நீக்காவிட்டால் அரிசி இறக்குமதி நிறுத்தப்படும்..- அரிசி இறக்குமதியாளர்கள் தெரிவிப்பு.
அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை நீக்காவிட்டால், அரிசி இறக்குமதியை நிறுத்த வேண்டியிருக்கும் என்று கொழும்பு புறக்கோட்டை அரிசி இறக்குமதியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நீக்க வேண்டும் அல்லது இறக்குமதி வரியை 50 ரூபாவாக குறைக்க வேண்டும் என இறக்குமதியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள 65 ரூபா வரி காரணமாக, அந்த அரிசியை அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்வதில் ஒரு கிலோவுக்கு சுமார் பதினைந்து ரூபா நட்டம் ஏற்படுவதாக இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதன் காரணமாக சில இறக்குமதியாளர்கள் இன்னும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை சந்தைக்கு வெளியிடவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.
நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அரிசி இறக்குமதி செய்யப்பட்டு இதுவரை 5000 மெற்றிக் தொன்களுக்கு மேல் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.