சேலத்தில் 725 ஆண்டுகள் பழமையான சோழர் காலத்துக் கல்வெட்டு கண்டுபிடிப்பு!
சேலம் மாநகர் நெத்திமேடு பகுதியில் சுமார் 725 ஆண்டுகள் பழமையான சோழர் காலத்துக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகரம் நெத்திமேடு அருகே உள்ள பெருமாள் கோவில் கரடு பகுதியில் பழமையான அம்சாயி அம்மன் மற்றும் சிவலிங்கம் ஆகிய சிலைகள் உள்ளது. இதனை அப்பகுதியில் உள்ள சிலர் அவ்வப்போது வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அங்கு இருந்த பழமை வாய்ந்த சுவாமி சிலைகள் காணவில்லை என புகார் வந்தது. இதனை அடுத்து திருத்தொண்டர் சபை தலைவர் அல்லிகுட்டை ராதாகிருஷ்ணன் மற்றும் அறநிலை துறை அதிகாரிகள், தொல்லியல் துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு 1190 ஆம் ஆண்டு மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் வைக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 725 ஆண்டுகள் பழமையான இந்த கல்வெட்டு தொல்லியல் துறையின் சேலம் நாமக்கல் கல்வெட்டு புத்தகத்தில் 258, 259 ஆவது பக்கத்திலும் இடம் பெற்றுள்ளது தெரியவந்தது. தொடர்ந்து அந்த இடங்களை ஆய்வு செய்தபோது அங்கு இருந்த சிவன் அம்சாயி அம்மன், பைரவர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சுவாமியின் சிலைகளும் மிகப் பழமையானது என தெரியவந்தது. இதை எடுத்து சிவாச்சாரியார்கள் சிவன் உள்ளிட்ட சுவாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பட்டாடை உடுத்தி சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
இதுகுறித்து திருத்தொண்டர் பேரவை அல்லி குட்டை ராதாகிருஷ்ணன் கூறுகையில், பழமை வாய்ந்த திரிபுரநாதர் எழுதிக் கொடுத்த கல்வெட்டுகள் வருவாய் துறை ஆவணங்கள் படி கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த கோவிலுக்கு சொந்தமான 1164 சதுரடிகளுக்கு முட்டுகல் நடப்பட்டும் உள்ளது. புறம்போக்கு நிலம் கோவில் சொத்து என்று உள்ள இந்த இடத்தை நில நிர்வாக ஆணையம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இருவரும் சேர்ந்து தணிக்கை செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் மேலும் இதுகுறித்து உண்மையான விசாரணை நடத்த நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்ற அவர், தற்போது சிவன் மற்றும் அம்பாள் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இன்னும் நிறைய சிலைகள் காணாமல் உள்ளது. அது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.