99ஆவது ஆண்டு நிறைவுக்குச் சென்றுள்ள இலங்கை தேசிய வானொலி.

99ஆவது ஆண்டு நிறைவுக்குச் சென்றுள்ள இலங்கை வானொலி ஒரு தேசிய அடையாளமாகவும் தேசிய வளமாகவும் காணப்படுவதாகவும், இதுவரை பாதுகாக்கப்பட்ட அதன் தரம் மற்றும் நிலைத்தன்மையை பாதுகாப்பதுடன், எதிர்கால நூற்றாண்டுக்கேற்ப புதுமைப்படுத்தப்பட்ட வானொலியாக அதனை முன்நோக்கி கொண்டு செல்லுவது அரசின் நோக்கம் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அவர் இந்த கருத்தை, “சியவச அபியச – தேசிய வானொலி நிலையம்” எனும் தலைப்பில், நேற்று முன் தினம் (16) குமாரதுங்க மண்டபத்தில், இலங்கை வானொலியின் 99ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிகழ்வில் கலந்து கொண்டு வெளியிட்டார்.
தேசிய பொறுப்புடன் செயற்படும் இலங்கை வானொலியிடம் உள்ள மனித வளத்தையும் இயல்நிலை வளத்தையும் சிறப்பாகப் பயன்படுத்தி, திட்டமிடப்பட்ட வழியில் முன்னேற வேண்டும் எனவும், எதிர்கால 5 ஆண்டுகளில் இதனை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
பிராந்திய சேவைகளின் மூலமாக புதிய தலைமுறைக்கு தகவல் தொடர்பு பணிகளை ஒப்படைப்பதற்கான திட்டங்களை விரிவுபடுத்தவும், அதற்காக கல்வி அமைச்சு உடனடியாக கூட்டு வேலைகளை மேற்கொள்வதற்கான ஒரு வலுவான செயல்திட்டத்தை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், மாணவர்களுக்கு அல்லது இளைஞர்களுக்கு வானொலி துறையில் வேலைக்கு நுழைய ஒரு இலட்சியமாக தேசிய வானொலி அமைந்தாக வேண்டும் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், அவர்களுக்கு அறிவையும் கல்வியையும் வழங்கும் தளமாக தேசிய வானொலி உருவாக வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
99ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கை தேசிய வானொலிக்காக வானொலி நூற்றாண்டு நினைவு முத்திரை இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது.