பெடரலை அனுராவிடம் வற்புறுத்துமாறு மோடிக்கு கடிதம் எழுதிய கஜேந்திரகுமார் .
இலங்கை ஒற்றையாட்சிக் கருத்தைக் கைவிட்டு தமிழ் மக்களை உள்ளடக்கிய பெடரல் அரசியலமைப்பை தயாரிக்க , ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்துமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
கடந்த எழுபத்தைந்து வருடங்களில் இலங்கையின் கொள்கை மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்க தவறியமையே நாடு இவ்வளவு கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் வீழ்ச்சியை எதிர்கொள்வதற்கு காரணம் என அக்கட்டுரையில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் இந்திய பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“எதிர்காலத்தில் இலங்கை நன்றாக இருக்க வேண்டுமானால், நாட்டின் கொள்கைகள் நன்றாக இருக்க வேண்டும். 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டு வரப்பட்டு 36 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இலங்கையின் நிலைமை அன்றைய நிலவரத்துடன் ஒப்பிடுகையில் மோசமடைந்துள்ளது.
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், ஒற்றையாட்சி அரசியலமைப்பு இருக்கும் வரை அந்தத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது அல்லது சுயநிர்ணய உரிமையைப் பெறுவது கடினமாக இருக்கும் என்பதால், 13வது திருத்தத்தை ஏற்றுக்கொள்ள இலங்கைத் தமிழ் மக்கள் பெரிதும் தயாராக இல்லை. இது தொடர்பாக 30க்கும் மேற்பட்ட நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன. மாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் கையகப்படுத்தியமையே இதற்குக் காரணம். இந்த நிலைதான் அதிகாரப் பகிர்வுக்கு முக்கியத் தடையாக உள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார்.