காஸாவில் ஏற்பட்டுள்ள தண்ணீர்ப் பற்றாக்குறை இனப்படுகொலைக்கு ஈடானது

இஸ்ரேல் காஸாவிற்குத் தூய்மையான நீர் கிடைக்காமல் தடுத்ததால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர் என்றும் இது இனப்படுகொலை நடவடிக்கை என்றும் மனித உரிமைக் குழுவான ‘ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்’ சாடியுள்ளது.

இஸ்ரேலிய அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கை மானுடத்திற்கு எதிரானது என்று கூறிய அது, மனிதகுலத்தைத் துடைத்தொழிக்கும் செயல்களில் அவர்கள் தொடர்ந்து ஈடுபடுவதாகக் குறிப்பிட்டது.

1948ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இனப்படுகொலை தொடர்பான தீர்மானத்தின்கீழ் இஸ்ரேலின் இந்தக் கொள்கை இனப்படுகொலையாகக் கருதப்படும் என்று அக்குழுவின் அறிக்கை கூறியது.

இனப்படுகொலை நடவடிக்கைகள் நடைபெற்றதாகக் கூறப்படுவதை இஸ்ரேல் தொடர்ந்து நிராகரித்துவருகிறது. அனைத்துலகச் சட்டத்தை மதித்து நடப்பதாகவும் 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து தன்னைத் தற்காத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு இருப்பதாகவும் அது கூறுகிறது. அந்தத் தாக்குதல்தான் அண்மைய போருக்கு வித்திட்டது.

தண்ணீர் கிடைக்கவிடாமல் செய்ததை இனப்படுகொலை நடவடிக்கை என்று வருணித்த அந்த அறிக்கை, இஸ்‌ரேலிய மூத்த அதிகாரிகள் சிலரின் அறிக்கைகள் பாலஸ்தீனர்களை அழிக்க விரும்பும் அவர்களின் நோக்கத்தைக் காட்டுவதாகக் குறிப்பிட்டது.

அதன்படி, தண்ணீரை மறுத்தது இனப்படுகொலைக்கு ஈடானது என்று அது கூறியது.

184 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை, இஸ்ரேல் காஸாவிற்கான தண்ணீர் விநியோகத்தை நிறுத்தியதுடன் மின்சாரத்தைத் துண்டித்ததாகவும் எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியதாகவும் குறிப்பிட்டது.

இந்த மாதம் ‘இனப்படுகொலை’ தொடர்பில் சாடியுள்ள இரண்டாவது மனித உரிமைக் குழு ‘ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்’ ஆகும். முன்னதாக, ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ அமைப்பும் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுவதாக அறிக்கை வெளியிட்டிருந்தது.

அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கும் தற்காப்புத்துறை முன்னாள் தலைவருக்கும் கைதாணை பிறப்பித்த சில வாரங்களில் இவ்விரு அறிக்கைகளும் வெளிவந்துள்ளன.

போர்க் குற்றங்கள், மானுடத்திற்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுவதன் தொடர்பில் இருவருக்கும் அவ்வாறு கைதாணை பிறப்பிக்கப்பட்டது. இருவரும் அந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.