எலக்ட்ரிக் பொருட்கள் இருக்குமென நினைத்துக் கொண்டு திறந்த பார்சலில் ஆண் சடலம்! – ஆந்திராவில் பயங்கரம்

வீட்டுக்கு வந்த பார்சலில் ஆண் சடலம் இருந்தது தொடர்பாக ஆந்திர மாநில போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், யண்டகண்டி கிராமத்தை சேர்ந்தவர் துளசி. இவருக்கு அரசு சார்பில் வீட்டு மனை வழங்கப்பட்டது. இதில் அவர் தற்போது வீடு கட்டி வருகிறார். தனது இடத்தில் வீடு கட்டி கொடுக்க ஷத்ரிய சேவா சமிதி என்ற அமைப்புக்கு அவர் விண்ணப்பித்திருந்தார். அவர்கள் ஏற்கனவே வீட்டுக்குத் தேவையான டைல்ஸ்கள் உள்ளிட்ட பொருட்களை போதுமானவரை அனுப்பி இருந்தனர். இதனை தொடர்ந்து, எலக்ட்டிரிக் பொருட்கள் வேண்டுமென மீண்டும், துளசி ஷத்ரிய சேவா சமிதிக்கு விண்ணப்பித்திருந்தார்.

இந்நிலையில், துளசிக்கு ஒரு பார்சல் வந்தது. இதில் எலக்ட்ரிக் பொருட்கள் இருக்குமென நினைத்துக் கொண்டு அந்த பார்சலை அவர் திறந்து பார்த்தார். அப்போது பாதி வெட்டப்பட்ட ஒரு அடையாளம் தெரியாத ஒரு ஆணின் உடல் உள்ள இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து அவர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் மேற்கு கோதாவரி மாவட்ட எஸ்பி நயம் அலி நேரில் வந்து விசாரணை நடத்தினார். அந்த பார்சலில் ஒரு கடிதமும் இருந்தது. அதனை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதில், ரூ.1.30 கோடி கொடுக்க வேண்டுமெனவும், இல்லையேல் பல இன்னல்களை சந்திக்க வேண்டி வரும் எனவும் எச்சரிக்கை விடப்பட்ட கடிதம் அதில் இருந்தது. இறந்தவருக்கு சுமார் 45 வயது இருக்கும் என போலீஸார் தெரிவித்தனர். இவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் ? யார் இவரை கொலை செய்தது ? மீதி உடல் எங்கே ? பார்சலை யார் அனுப்பியது உள்ளிட்ட கோணங்களில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

.

Leave A Reply

Your email address will not be published.