பிரான்சின் வரலாற்று ஆசிரியர் படுகொலை; 8 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு.

பிரான்சில் வரலாற்று ஆசிரியர் சேமுவல் பேட்டி கொல்லப்பட்ட சம்பவத்தின் தொடர்பில், எட்டுப் பேர் குற்றவாளிகள் என பாரிஸ் நீதிமன்றம் ஒன்று சனிக்கிழமை (டிசம்பர் 20) தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திரு பேட்டியின் பள்ளிக்கு அருகே 18 வயது ரஷ்யரான அப்துல்லாக் அன்ஸொரொவ் அவரைக் கத்தியால் குத்தி, அவரது தலையைத் துண்டித்தார்.

அந்த ஆசிரியர் சுதந்திரப் பேச்சுரிமையை எடுத்துக்காட்ட, வகுப்பு ஒன்றில் நபிகள் நாயகத்தைக் கேலிச்சித்திரமாகக் காண்பித்ததால் அன்ஸொரொவ் சினம் அடைந்தார்.

அந்தக் கொடூரமான தாக்குதலுக்குப் பிறகு, காவல்துறையினர் அன்ஸொரொவைச் சுட்டுக் கொன்றனர்.

நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்று தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பு எதிர்பார்த்ததைவிட அது மேலும் கடுமையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

சில வேளைகளில் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டதைவிட அது கடுமையாக இருந்தது என்றும் அந்தத் தீர்ப்பு, திரு பேட்டியின் கொலை பிரான்சில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்திற்கான அறிகுறியாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

“பிரான்சின் அடிப்படை விழுமியங்கள் மீதான தாக்குதல் அது,” என்று நீதிபதி ஃபிராங்க் ஸியந்தாரா கூறினார். அவர் தீர்ப்பை வழங்கியபோது நீதிமன்றத்தில் இருந்த சிலர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். குற்றவாளிகளின் குடும்பத்தாரோ ஏமாற்றத்துடன் சோகத்தில் காணப்பட்டனர்.

பிரான்சில் 2015, 2016ஆம் ஆண்டுகளில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்ட பெரிய அளவிலான பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு, திரு பேட்டியின் கொலைச் சம்பவம் நடந்துள்ளது.

அவரது மரணம் நாட்டில் உறுதியற்ற நிலையை ஏற்படுத்தியது. பிரான்சில் பொதுப் பள்ளி ஆசிரியர்கள் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளாகக்கூடிய சாத்தியம் அதிகரித்திருப்பது குறித்த கவலையை அது மேலும் கூட்டியது.

அந்த அச்சம், வட பிரான்சில் 2023ல் மற்றோர் ஆசிரியர் கொல்லப்பட்டதை அடுத்து மேலும் அதிகரித்தது.

இந்நிலையில், அன்ஸொரொவின் நண்பர்களான ந’ஈம் பொடாவுட், 22, அஸிம் எப்சிர்கானொவ், 23, ஆகிய இருவரும் தாக்குதலில் உடந்தையாக இருந்ததாகத் தீர்ப்பளிக்கப்பட்டது. அவர்கள் இருவருக்கும் ஆளுக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் இருவருக்கு 13 ஆண்டுகளும் 15 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் திரு பேட்டியின் நற்பெயரை இணையத்தில் களங்கப்படுத்தியதாகவும் அதுவே, கொலைக்காரரின் கவனத்தை ஈர்த்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் நால்வர் இணையத்தில் அன்ஸொரொவுக்கு ஊக்கமளித்து, அவரது தாக்குதலைப் பாராட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு ஒன்று முதல் ஐந்தாண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.