உலகச் சேலை தினத்தை முன்னிட்டு பாரம்பரியச் சேலை உடுத்திப் போட்டியிட்ட கல்லூரி மாணவிகள்.
ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் 21ஆம் தேதி, உலகச் சேலை தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு மின்மினி, போத்தீஸ் நிறுவனங்கள் இணைந்து சேலை தினப் போட்டியை இந்த ஆண்டு அறிவித்தன.
கல்லூரி மாணவிகளுக்காக நடனம், விவாதம், பாரம்பரியச் சேலை அணிதல் போன்ற பிரிவுகளில் இப்போட்டி பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டது.
இதன் இறுதிச் சுற்று, சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) நடந்தது.
போட்டி தொடங்குமுன் பாரம்பரியச் சேலை அணிந்து வந்திருந்த மாணவிகள் கல்லூரி வளாகத்தில் ‘வாக்கத்தான்’ சென்றனர். பின்னர் இசைக்கேற்றபடி அவர்கள் நடனமாடினர்.
அடுத்து, ‘சேலை கட்டியதும் அழகாகத் தெரிவது எந்தத் தலைமுறைப் பெண்கள்?’ என்ற தலைப்பில் விவாதப் போட்டி நடந்தது. இதில் 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள், 1980, 1990ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் என்ற பிரிவுகளில் மாணவிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, கலாசாரத்தைப் பறைசாற்றும் விதமாக நடைபெற்ற பாரம்பரியச் சேலை அணியும் போட்டியில் மாணவிகள் பலவிதமான சேலைகளை அணிந்து, பொருத்தமான அலங்காரங்களுடன் கலந்துகொண்டனர்.
வெற்றிபெற்றவர்களுக்குப் போத்தீஸ் நிறுவனத்தின் பரிசுக் கூப்பன்கள் வழங்கப்பட்டதாகத் தமிழக ஊடகங்கள் தெரிவித்தன.