பெங்களூரு அருகே கார் மீது லாரி கவிழ்ந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி!

பெங்களூரு அருகே கார் மீது லாரி கவிழ்ந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் சந்திரகயப்பா கவுல் (48) நேற்று தனது குடும்பத்தினருடன் காரில் விஜயபுரா சென்றார். நெலமங்களா அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, கர்நாடக பால் கூட்டமைப்புக்கு சொந்தமான கனரக லாரி பக்கவாட்டில் கார் மீது கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இதில் கார் முற்றிலுமாக உருக்குலைந்து நொறுங்கியது. இதில் காரில் பயணித்த ச‌ந்திரகயப்பா கவுல், அவரது மனைவி கவுரபாய் (42), விஜயலட்சுமி (36), ஜேன் (16), தீக்சா (12), ஆர்யா (5) ஆகிய 6 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கிரேன் மூலம் லாரியை தூக்கினர். பின்னர் நசுங்கிய உட்ல்களை மீட்டு நெலமங்களா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நெலமங்களா போலீஸார், சிசிடிவி கேமிரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், லாரியின் ஓட்டுநர் வேகமாக சென்ற நிலையில், வாகனத்தை வலது பக்கமாக திருப்பியதால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது தெரியவந்துள்ளது.

இந்த விபத்தின் காரணமாக பெங்களூர்- துமக்கூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வார இறுதி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்ற பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். போக்குவரத்து போலீஸார் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு வழிநெடுக நின்று போக்குவரத்தை சீர் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.