பிரேசிலில் பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது… 61 பேர் பரிதாப பலி.

பிரேசிலின் சாவோ பாலோ மாகாணத்தில் விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 61 பேர் உயிரிழந்தனர்.

இரட்டை எஞ்சின் கொண்ட அந்த விமானம் தெற்கு மாகாணமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ பாலோ நகரிலுள்ள குவாருல்ஹோஸ் விமான நிலையத்திற்குப் பறந்து கொண்டிருந்த போது, ​​வின்ஹெடோ நகரில் விழுந்ததாக வோபாஸ் (Voepass) விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்து தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான காணொளியில், அந்த விமானம் செங்குத்தாகச் சுழன்று வீழ்ந்ததைக் காண முடிகிறது.

ஏ.டி.ஆர் 72-500 எனும் அந்த விமானத்தில் 57 பயணிகள் மற்றும் விமான குழுவினர் நான்கு பேர் என 61 பேர் இருந்துள்ளனர். இந்த விபத்தில் யாரும் உயிர்பிழைக்கவில்லை என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, உயிரிழந்தோரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் துணை நிற்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என, சாவோ பாலோ மாகாண ஆளுநர் டார்சிஸியோ கோம்ஸ் டீ ஃபிரெயிட்டாஸ் தெரிவித்துள்ளார்.

விமானத்தின் காக்பிட் அறையில் விமானிகளுக்கு இடையிலான உரையாடலை பதிவு செய்யும் கருவிகளை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ்-இத்தாலியைச் சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான ஏ.டி.ஆர் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாகத் தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான விமானம் குடியிருப்புப் பகுதியில் விழுந்தது. ஆனால், அங்கிருந்தவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த விபத்தின்போது, குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒரேயொரு வீடு மட்டும் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வீடுகள் நிரம்பியுள்ள ஓரிடத்தின் பெரும்பகுதி நெருப்பு மற்றும் புகையால் சூழப்பட்டிருப்பதை வீடியோ பதிவுகள் காட்டுகின்றன.

காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

விமான கண்காணிப்பு இணையதளமான ஃபிளைட்ரேடார்24 (Flightradar24) காஸ்கேவலில் இருந்து அந்த விமானம் உள்ளூர் நேரப்படி 11:56க்கு (14:56 ஜிஎம்டி) புறப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. ஒன்றரை மணிநேரம் கழித்து விமானத்தில் இருந்து கடைசி சிக்னல் பெறப்பட்டுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அந்த விமானம், “முறையான பதிவு மற்றும் தகுதிச் சான்றிதழுடன் நல்ல நிலையில் இருந்ததாக”, பிரேசிலின் விமானப் போக்குவரத்து முகமை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.