ஓட்டுநர்கள் பணியின்போது கைப்பேசி பயன்படுத்தினால் பணியிடை நீக்கம்.
தமிழகத்தில் அண்மைக் காலமாக, அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் கைப்பேசியைப் பயன்படுத்திக் கொண்டே, பேருந்து ஓட்டும் காணொளிகள் இணையத்தில் பரவி வருகின்றன. இதனால் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அலட்சியமாக இருக்கும் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது கைப்பேசியைப் பயன்படுத்தினால் 29 நாள்களுக்குப் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு ஓட்டுநர்களுக்குத் தெரியும்படி அனைத்து அறிவிப்புப் பலகைகளிலும் குறிப்பிடப்பட வேண்டும் என்று போக்குவரத்து மண்டல அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.