‘பெரியார் பகுத்தறிவு எணினி நூலகம் மற்றும் ஆய்வு மையத்தை’ திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்
சென்னை வேப்பேரி பெரியார் திடலில் அமைக்கப்பட்டுள்ள ‘பெரியார் பகுத்தறிவு எணினி நூலகம் மற்றும் ஆய்வு மையத்தை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(டிச. 24) காலை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரை முருகன், சேகர் பாபு மற்றும் திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து பேசிய அவர், “இப்போது தாய் வீட்டுக்கே வந்திருப்பதாக உணர்கிறேன். தமிழினம் சுயமரியாதை பெற வாழ்நாளெல்லாம் உழைத்தவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் பெரியார்.
திராவிட மாடல் குறித்து கேலி செய்பவர்களுக்கு பெரியாரின் கைத்தடி ஒன்றே போதும். அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்தவர், அனைவரது மனதுக்குள்ளும் இடம்பிடித்திருப்பவர் தந்தை பெரியார். பெரியாரை உலகமயமாக்கி உலகின் சொத்து ஆக மாற்றியிருக்கிறோம். இளைய தலைமுறை இளைஞர்களுக்கும் அவரை கொண்டு சேர்க்கிறோம்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு ‘கைத்தடி’ ஒன்றை நினைவுப்பரிசாக வழங்கியுள்ளார் திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி. முன்னதாக, சென்னை, அண்ணா சாலை, அரசு பன்நோக்கு நவீன சிறப்பு மருத்துவமனை அருகில் உள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் மு. க. ஸ்டாலின்.