புதிய பிரெஞ்சு அரசு குறித்த அறிவிப்பு
பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மெக்ரோன், அந்நாட்டின் அடுத்த அரசாங்கத்தை அறிவித்துள்ளார்.
பிரெஞ்சு அதிபர் மெக்ரோன், ஃபிராங்குவா பெய்ரூவை பிரான்சின் நான்காவது பிரதமராக அறிவித்துள்ளார். பெய்ரூ, இவ்வாண்டு பிரான்சில் பிரதமர் பதவியை வகிக்கும் நான்காவது நபராவார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது ஆகப் பெரிய பொருளியலான பிரான்ஸ், அரசியல் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. அதை சரிசெய்யும் முயற்சியில் மெக்ரோன் இறங்கியுள்ளார்.
முன்னாள் பிரதமர் எலிசபெத் போர்ன், 63, கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மற்றொரு முன்னாள் பிரதமான 62 வயது மானுவெல் வல்ஸ், வெளியுறவு வட்டார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மனினுக்கு நீதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தற்காப்பு அமைச்சர் சபேஸ்டியன் லெக்கோர்னு, வெளியுறவு அமைச்சர் ஷோன் நோவெல் பேரட் இருவரின் பொறுப்புகளிலும் மாற்றம் இல்லை என மெக்ரோனின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விஸ்வாசியாகப் பார்க்கப்படும் 38 வயது லெக்கோர்னு, 2017ஆம் ஆண்டில் மெக்ரோன் முதன்முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து பிரான்சின் ஒவ்வோர் அரசாங்கத்திலும் இடம்பெற்று வந்துள்ளார்.
பழைமைவாதக் கொள்கைகளைக் கொண்ட உள்துறை அமைச்சர் புரூனோ ரெட்டாயூ, வலது சாரி கொள்கைகளைக் கொண்ட கலாசார அமைச்சர் ரச்சிடா டாட்டி ஆகியோரின் பொறுப்புகளிலும் மாற்றம் இல்லை. புரூனோ ரெட்டாயூ, சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தப்போவதாக உறுதியளித்துள்ளார்.
பொருளியல் அமைச்சராக 66 வயது எரிக் லொம்பார்ட் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அரசாங்கத் துறைகளுக்குக் கடன் வழங்கும் அமைப்பான காய்ஸ் டெஸ் டெப்போட்சின் (Caisse des Depots) தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார். அவர்தான் அடுத்த ஆண்டுக்கான பிரான்சின் வரவு செலவுத் திட்டத்தை வரையவுள்ளார்.
“இன்று மாலை நாங்கள் அறிவிக்கும் குழுவை எண்ணி நான் பெருமைகொள்கிறேன்,” என்று பெய்ரூ எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அனுபவம்வாய்ந்த தமது அரசாங்கம் மீண்டும் நம்பிக்கையைப் பெறும் முயற்சியில் இறங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெய்ரூவுக்கு முன்பு பிரதமராகப் பதவி வகிக்க மிஷெல் பார்னியரின் அரசாங்கம் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததால் கவிழ்ந்தது. அதனைத் தொடர்ந்து திடமான அரசாங்கத்தை அமைக்கும் நோக்குடன் மெக்ரோன், முன்னாள் பிரதமர்கள் இருவரை அமைச்சரவையில் நியமித்துள்ளார் என்று நம்பப்படுகிறது.