தமிழக வெற்றி கழகத்துக்கு படை திரட்டும் ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள்!
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து பத்து மாதங்கள் கடந்து விட்டது. அண்மையில் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தி படைபலத்தைக் காட்டி கொள்கை பிரகடனம் செய்த விஜய், தற்போது தனது கடைசிப் படத்தை நடித்துக் கொடுப்பதில் மும்முரமாக இருக்கிறார். இருந்த போதும் அவரது கட்சிக்காரர்கள் உறுப்பினர் சேர்க்கை, நலத்திட்ட உதவிகள் என அரசியல் நடவடிக்கைகளில் சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள்.
பிப்ரவரி மாதத்தில் மாவட்ட பொறுப்பாளர்களை அறிவிப்பதற்கான வேலைகளில் தீவிரமாக இருக்கிறார் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த். இதையடுத்து கட்சிப் பொறுப்புகளை பெறுவதற்கு மாவட்ட வாரியாக பலரும் போட்டிபோட்டு வருகிறார்கள். இதனிடையே, தனது ரசிகர்களை மட்டும் நம்பிக் கொண்டிருக்காமல் பிற கட்சிகளைச் சேர்ந்த அரசியல் புள்ளிகள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் என மக்களோடு தொடர்பில் இருந்தவர்களையும், இருப்பவர்களையும் கட்சிக்குள் கொண்டுவர விஜய்க்கு ஆலோசனை சொல்லப்பட்டுள்ளதாம்.
ஏற்கெனவே பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் விஜய்க்கு தூதுவிட்டுள்ள நிலையில், தற்போது ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகள் குழு ஒன்று தவெக-வில் இயங்க மாநிலம் முழுவதும் தனியாக படைதிரட்டி வருவதாகச் சொல்கிறார்கள். இந்த ரிட்டையர்டு போலீஸ் அதிகாரிகள் விழுப்புரம் மாவட்டத்தில் ஏடிஎஸ்பி-யாக பணியாற்றி ஓய்வுபெற்ற திருவண்ணாமலையைச் சேர்ந்த சங்கரிடமும் பேசிவருவதாகச் சொன்னார்கள்.
இதையடுத்து சங்கரை நாம் இது விஷயமாக தொடர்பு கொண்ட போது, “உண்மைதான். என்னுடன் பணியாற்றிய சக அதிகாரிகள் விஜய் கட்சியில் சேர்ந்து பயணிப்பது குறித்து என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், விஜய் தரப்பிலிருந்து இன்னும் எனக்கு அதிகாரபூர்வ அழைப்பு ஏதும் வரவில்லை. அப்படி அழைப்பு வந்தால் விஜய்யை கட்டாயம் சந்திப்பேன். கட்சியில் எனக்கான பணி என்னவாக இருக்கும் என்பதை அவரிடம் நேரடியாக பேசி தெளிவுபடுத்திக் கொண்டு, அதில் எனக்கு உடன்பாடு இருக்குமானால் எனது ஆதரவாளர்கள் சகிதம் தவெக-வில் இணைந்து பணியாற்ற தயாராய் இருக்கிறேன்” என்றார்.
இதேபோல், ஓய்வுபெற்ற ஆட்சியர்கள், சார் ஆட்சியர்களையும் தவெக-வுக்குள் கொண்டுவர இன்னொரு தரப்பினர் முயற்சி செய்வதாகச் சொல்கிறார்கள். இதனிடையே 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேடும் பணியையும் விஜய்க்கான தேர்தல் வியூக வகுப்பாளர்கள் தேட ஆரம்பித்திருப்பதாகவும் ஒரு தகவல் தடதடக்கிறது. மக்கள் மத்தியில் பிரபலமான மருத்துவர்கள், பேராசிரியர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் என இலக்கு வைத்துக் கொண்டு இந்த வேட்பாளர் தேடுதல் குழு களமிறங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள்!