இரவு நேர வாகன சோதனை முறையில் மாற்றம் : பதில் பொலிஸ் மா அதிபர்
இரவு நேரங்களில் வாகனங்களை நிறுத்தும் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு , பதில் பொலிஸ் மா அதிபர் தொடர் விசேட அறிவுறுத்தலொன்றை விடுத்துள்ளார்.
சம்பந்தப்பட்ட போக்குவரத்து பொலிசார், வாகன ஓட்டிகளுக்குத் தெளிவாகத் தெரியும் வகையில் ஒளிரும் ஜாக்கெட் மற்றும் ஒளிரும் கையுறைகளை அணிய வேண்டும், மேலும் காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிவப்பு மின்விளக்குகளை முடிந்தவரை பயன்படுத்துமாறு சம்பந்தப்பட்ட போக்குவரத்து பொலிசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. .
தலைமையக பொலிஸ் பரிசோதகர்கள், நிலைய கட்டளைத் தளபதிகள் மற்றும் போக்குவரத்து நிலையத் தளபதிகள் இரவுப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் இவ்வாறு செய்கிறார்களா என்பதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் பதில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
இரவு நேரங்களில் போக்குவரத்தை நிறுத்துவதற்கு போக்குவரத்து கடமையில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் பல்வேறு வகையான தீப்பந்தங்களை பயன்படுத்துவதால் வாகனத்தை கையாள்வதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் சில சந்தர்ப்பங்களில் சிரமம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, அதனால் விபத்துக்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும், அதிகாரிகள் ஒளிரும் ஜாக்கெட் அணியாததால் விபத்துக்குள்ளாகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதையும் அவதானித்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.