13. இந்திய தொடர்புகளும் , இயக்கங்களின் இந்திய அனுபவங்களும் : வெற்றிச் செல்வன்

பகுதி 13

83 கலவரத்திற்கு பின்பு நினைவில் வந்த மூன்று முக்கிய நிகழ்ச்சிகள் பதியப்பட வேண்டும்.

உமாமகேஸ்வரன் மேல் இருந்த வழக்கை முடிப்பதற்கு சாட்சிகளை கலைப்பதற்கு முயற்சி செய்தது , அதற்காக மாறனும் கணபதியும் ஈடுபட்டார்கள். திமுகவைச் சேர்ந்த மணவை தம்பி இவரிடம் உமா தனது கைத்துப்பாக்கியை கொடுத்து பழுது பார்த்ததை காவல்துறை கண்டுபிடித்து அரசு சாட்சியாக சேர்த்தது.

உமா கும்மிடிப்பூண்டியில் சுட்டவரையும் அவரது உறவினர்களையும் லோக்கல் அரசியல்வாதிகள் மூலம் சாட்சியை விலைக்கு வாங்கியது. அச்சமயம் எமக்கு இருந்த சாதகமான நிலையில் இது பெரிய காரியமாக இருக்கவில்லை.

வவுனியா எஸ்பி ஹேரத் என நினைக்கிறேன். இவரை அவரது அலுவலக மேஜையில் குண்டு வைத்து கொலை செய்த அம்பிகை பாகன், எங்களது நடேசன் அண்ணையும் முதன்முதலாக யோகேஸ்வரன் எம்பி இடம் ஒரு கடிதம் வாங்கிக் கொண்டு உமா மகேஸ்வரனை சந்திக்க எம்எல்ஏ ஹாஸ்டல் வந்தார்கள்.

மாதவன் அண்ணாவுக்கு அம்பிகை பாகனை முதலிலேயே தெரியும் என்பதால் உணவு வாங்கிக் கொடுத்து உமாவை சந்திக்க வைத்து, பின்பு முகாமுக்கு அனுப்பப்பட்டார்கள்.

இங்கு படித்துக்கொண்டிருந்த இலங்கை மாணவர்களை வசந்தி திருஞானம், குணசீலன்,ஜெயசீலன் போன்ற பலரை அவர்கள் படிப்பை கெடுத்து இயக்க வேலைகளுக்கு அனுப்பியதால், இந்திய பயிற்சிக்கு அனுப்ப ஏற்பாடு செய்ததால், இவர்களுக்குப் பாதுகாவலனாக குறிப்பாக வசந்திக்கு , ராஜ்மோகன் என்பவர்,இவர் முன்பு மட்டக்களப்பில் கழுகு படை என்ற பெயரில் இயங்கியவர் என நினைக்கிறேன். இவர் அடிக்கடி எம்எல்ஏ ஹாஸ்டல் அலுவலகத்துக்கு வந்து, எங்களோடும், உமாவோடும்பல மணி நேரம் கதைத்துகொண்டிருப்பார்.

ஆனால் பின்பு படிக்கும் மாணவர்களை இயக்க வேலைகளில் நிரந்தரமாக ஈடுபடுத்தியதால், உமாமகேஸ்வரனுடன் கடும் சண்டை பிடித்தார்.படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் அப்பா அம்மா கடும் கஷ்டத்தில் பணம் அனுப்புவதாகவும் அவர்கள் படிப்பை கெடுத்து அவர்களின் வாழ்க்கையை நாசமாக்க வேண்டாமென ராஜ்மோகன் கூறி , சண்டை பிடித்தார்.

சண்டை கூடிஇருவரும் கண்ணியக் குறைவான வார்த்தைகளால் திட்டிக் கொண்டார்கள். இவர்கள் சண்டை பிடிக்கும் போது நாங்கள் வெளியில் வந்து விட்டோம். பின்பு நான் டெல்லி போன பின்பு கேள்விப்பட்டேன் சிறையிலிருந்து தப்பி வந்த வாமதேவனை கொண்டு, அவரை கொலை செய்து எரித்து விட்டதாக. ராஜ் மோகன் கொலைதான் தமிழ்நாட்டில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் செய்த முதல் கொலை.

இரண்டொரு நாளில் மட்டக்களப்பு சிறையிலிருந்து தப்பிய தோழர்களின் ஒரு பகுதியினர் என நினைக்கிறேன் பழைய எம்எல்ஏ ஹாஸ்டல் வந்திருந்தார்கள். அவர்களின் வரவு பரபரப்பாக இருந்தது.

பரந்தன் ராஜன் அவர்களும், அற்புதமும் காயம்பட்டு இருந்தபடியால் மேலே ரூமுக்கு வரவில்லை. மாணிக்கதாசன் மேலே வந்தார். இவர்கள் யாரும் எனக்கு பழக்கம் இல்லை.கந்தசாமி மாறன் பழைய கதைகளைச் சொல்லும்போது மாணிக்கதாசன் பற்றியும்,பரந்தன் ராஜன் அவர்களைப் பற்றியும் ராஜனின் கார் ஓட்டும் திறமை பற்றியும் என்னிடம் கூறி இருந்தபடியால் அவர்களை ஒருவித பிரமிப்போடு பார்த்தேன், என்பதே உண்மை.

பின்பு காயம் பட்டவர்களை சென்னை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்தார்கள். அற்புதத்தை பற்றிய சில செய்திகள் வந்தன எந்த கை விலங்கையும் உடனடியாக திறந்து விடக் கூடிய திறமை இருந்ததென்று, இவரின் இந்த திறமையை ஜெயிலில் வீடியோ எடுத்ததாகவும் கதைகள் வந்திருந்தன.உண்மை பொய் தெரியாது.

லண்டனிலிருந்து ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்தது. டாக்டர் ஜார்ஜ் அப்பாஸ் என்பவரின் தலைமையில் இயங்கிய PFLP என்னும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தோடு எமக்கு லண்டன் கிளை மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது.இதன் மூலம் பயிற்சிக்கு எமது தோழர்களை அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும் அறிய முடிந்தது.

எமது லண்டன் கிளை பொறுப்பாளர் கிருஷ்ணன் எட்டு பேருக்கான விமான டிக்கெட்டுகளை அனுப்பியிருந்தார் என நினைக்கிறேன். அந்தக் டிக்கெட் டெல்லி டமஸ்கஸ் (சிரியா) வரையான ஒருவழிப்பாதை டிக்கெட்.

கண்ணன் சந்ததியார் உமாமகேஸ்வரன் மூவரும் மிக நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தார்கள். இடைக்கிடை மாணிக்கதாசனையும் அழைத்து பேசுவார்கள். அடுத்த நாள் உமா மகேஸ்வரனும் சந்ததியாரும் என்னை அழைத்து உடனடியாக டெல்லிக்கு போக தயாராகும் படி கூறினார்கள்.

எனக்கு மிகவும் மகிழ்ச்சி. PLOபயிற்சி பற்றி அறிந்திருந்த நான் என்னையும் பயிற்சிக்கு அனுப்பப் போகிறார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் டெல்லி போய் முதல் பட்ச்சில் 8 பேரோ அல்லது 10 பேரா நினைவில் இல்லை.,டெல்லி வந்து தங்குவதற்கும் விமான டிக்கெட் புக் பண்ணி தேதியை அறிவிக்கும் படியும் கூறினார்கள்.

இதில் ஒரு பிரச்சனை வந்தது. பெயர் போட்டு வந்த டிக்கெட்டுகளுக்கு அந்தப் பெயரில் இலங்கை பாஸ்போர்ட் தயாரிக்கவேண்டும். நான் முழித்துக் கொண்டிருக்கும் போது, மாணிக்கதாசன் வந்து இது ஒரு சின்ன விஷயம் யோசிக்காதே, நீ டெல்லி போய் , டெல்லி ரயில்வே ஸ்டேஷனுக்கு முன்னால் இருக்கும் பாகர்கஞ் ஏரியாவில் உள்ள ஹோட்டல் நவரங்கில் தங்கியிருக்கும் கொழும்பு தமிழர் திலக்கை சந்தித்து தனது பெயரை சொல்லி உதவி கேட்கும் படி கூறினார்.

உமா மகேஸ்வரனும் தன்னிடமிருந்த பாஸ்போர்ட்டுகள் , எனது பாஸ்போர்ட் உட்பட வெளிநாட்டு பயிற்சிக்கு வந்தவர்களின் பாஸ்போர்ட்டுகள் எல்லாவற்றையும் ஒரு சிறு மூட்டையாக என்னிடம் கொடுத்தார். விமான டிக்கெட்டுகளையும் என்னிடம் கொடுத்து டெல்லியில் எங்கு போய் தங்க போகிறாய் என கேட்டார்.

நானும் முதல் முறை டெல்லி போனபோது தங்கிய,எல்.கனேசன் எம்பி வீட்டில் தங்கலாம் என கூறினேன். அவர் அங்கு தங்கசம்மதிப்பாரா? இல்லாவிட்டால் குறைந்த வாடகை விடுதியில் தங்கும் படியும் கூறினார்.

நாங்கள் இருந்த எம்எல்ஏ விடுதியின் உள்ளே இருந்த ஒரு அறையில் தான் L.கணேசன் அண்ணா தங்கியிருந்தார். நான் அவரிடம் விபரம் கூறி தங்குவதற்கு அனுமதி கேட்டேன். டெல்லி போவதற்கான காரணத்தையும் கூறினேன்.

அவர் உடனடியாக சம்மதம் கூறி, பயிற்சிக்கு போகும் தோழர்களையும் அங்கேயே தங்க வைக்கும் படியும் கூறினார்.அங்கு தங்குவதற்கு தனது உறவினர் பையன் சித்தாத்தன் தான் கூறியதாக கூறினால் உதவி செய்வார் எனவும் கூறினார்.

அங்கிருந்த சில திமுக கட்சிக்காரர்கள் தலைவர் கலைஞரிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு செய்யலாம் தானே என்று கேட்டார்கள். இலங்கை தமிழருக்கு இந்த நேரத்தில் நாங்கள் செய்ய வேண்டிய உதவிகளில் ஒன்றுதான் இது.

இதற்காக தலைவர் கலைஞர் வருத்தப்பட மாட்டார் சந்தோசம்தான் படுவார். தான் போய் கலைஞரிடம் இதைப்பற்றி பேசும்போது அங்கிருக்கும் சிலர் இலங்கை தமிழருக்கு வீடுகொடுத்தாள் வெடிகுண்டு துப்பாக்கி என்று பிரச்சனை வந்தால் திமுக விக்குகெட்ட பெயர் என்று தலைவரிடம் போட்டுக் கொடுப்பார்கள். அதெல்லாம் தேவையில்லை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினார்.

டெல்லியில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய மத்திய அரசு அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் மற்றும் வெளிநாட்டு தூதுவர் அதிகாரிகள் போன்றவற்றை சந்தித்து கழக பெயரை நான் முன்னிறுத்த பிள்ளையார் சுழி போட்டு உதவி செய்தவர் எல் கணேசன் எம்பி அவர்கள்தான்.

எந்த ஒரு உதவியும் எங்களிடமிருந்து அவர் எதிர்பார்க்கவில்லை.ஆனால் அவரிடமிருந்து நாங்கள் பல உதவிகள் குறிப்பாக எமது தோழர்கள் வந்து போய் தங்குவதற்கும் அவரது அரசு தொலைபேசியை நாங்கள் பாவிப்பதற்கும் உதவினார். அதில்தான் எல்லா வெளிநாட்டு அழைப்புகளை ஏற்படுத்தி பேசுவோம் அந்த காலத்தில் அவருக்கு எங்களால் வந்த தொலைபேசி பில் கூட நாங்க கட்டவில்லை.

எல் கனேசன் அண்ணாவைப் பற்றி பின்பு விரிவாக எழுதுகிறேன் அவர் இலங்கைத் தமிழருக்கான போராட்டத்திற்குதான் உதவி செய்தார். தனிப்பட்ட ஒரு இயக்கத்துக்காக செய்யவில்லை . நானும் அடுத்த நாள் டெல்லி போக ஏற்பாடுகள் செய்தேன்.அப்போது இன்றுடன் எனது சென்னை வாழ்க்கை முடிகிறது என்று எனக்கு தெரியவில்லை.

தொடரும் ……


அனைத்து பதிவுகளையும் படிக்க இங்கே அழுத்தவும்

Leave A Reply

Your email address will not be published.