மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்குச் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40-க்கும் மேற்பட்டோர் காயம்!

ஊத்தங்கரை அருகே சாலையோர பள்ளத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்குச் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த வீரியம்பட்டி கூட்ரோடு பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளி அருகே சுமார் 20 அடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு, தர்மபுரி மாவட்டம் எட்டியம்பட்டி பகுதியிலிருந்து மூன்று பேருந்துகளில் 150-க்கும் மேற்பட்டோர் வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டுச் சென்றனர்.

அந்த பேருந்துகள் ஊத்தங்கரை அடுத்த வீரியம்பட்டி கூட்ரோடு பகுதியில் சென்றபோது. முதலில் வந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. பேருந்தில் 52 பேர் பயணம் செய்த நிலையில் 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

மேலும் ஓட்டுநர் உள்பட ஆறு பேர் படுகாயம் அடைந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பிறகு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம். சரயு, மாவட்ட எஸ்பி தங்கதுரை, ஊத்தங்கரை அதிமுக எம்எல்ஏ டி.எம்.தமிழ்செல்வம்,திமுக எம்எல்ஏ மதியழகன், மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் பரமசிவம் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.