ஏமனின் முக்கியப் பகுதிகளில் வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.

இஸ்ரேலிய ராணுவம் ஏமனின் முக்கியப் பகுதிகளில் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

டிசம்பர் 26ஆம் தேதி நடந்த இந்தத் தாக்குதலில் ஏமனின் சனாஸ் விமான நிலையம், ராணுவத் தளங்கள், மின்சார நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இஸ்ரேலியத் தாக்குதலில் ஆறு பேர் மாண்டதாக ஹூதி கிளர்ச்சியாளர்களின் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அண்மைக் காலமாக இஸ்ரேலுக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பூசல் அதிகரித்து வருகிறது. வட்டாரத்தில் தனது பலத்தை அதிகரிக்க ஈரான் அரசாங்கம் ஹூதிக்களுக்கு ஆதரவு வழங்கி வருகிறது.

இதற்கிடையே இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு ஹூதி படையினருக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காணொளி வாயிலாக பேசிய நெட்டன்யாகு ஏமனின் பயங்கரவாதத்தை ஒடுக்கும் வரை இஸ்ரேல் ஓயாது என்றும் கூறினார்.

சனாஸ் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தலைவர் அன்டோனியோ குட்டரஸ் கவலைத் தெரிவித்துள்ளார். இது பிரச்சினையைப் பெரிதாக்கும் என்று அவர் கூறினார்.

ஏமனில் உலகச் சுகாதார அமைப்பின் தலைவர்
இந்நிலையில், விமான நிலையத்தின்மீது தாக்குதல் நடத்தப்படும்போது தாம் அங்கு இருந்ததாக உலகச் சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசுஸ் சமூக ஊடகம் வழி தகவல் வெளியிட்டுள்ளார்.

தாக்குதலின்போது தான் பயணம் செய்யவிருந்த விமானத்தின் சிப்பந்தி ஒருவர் காயமடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

திரு டெட்ரோஸ் விமான நிலையத்தில் இருந்தது குறித்து இஸ்ரேலுக்கு தெரியுமா இல்லையா என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இஸ்ரேல் அதற்கு பதிலளிக்கவில்லை.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் ஊழியர்கள் சிலர் ஏமன் கிளர்ச்சியாளர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்வதற்காக டெட்ரோஸ் ஏமன் சென்றுள்ளார்.

அவர் ஏமனை விட்டு புறப்படுவதற்கு முன்னர் தாக்குதல் நடந்துள்ளது. விமானப் போக்குவரத்து கட்டமைப்பு, புறப்பாடு இடம், ஓடுபாதை உள்ளிட்டவை இஸ்ரேலியத் தாக்குதலால் சேதமடைந்ததாக டெட்ரோஸ் தெரிவித்தார்.

விமான நிலையத்தின் நிலைமை சரியான பிறகே ஏமனில் இருந்து புறப்படமுடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.