மோசடியை மோசடியால் வென்ற மகன்.
‘முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்’ என்பதற்கேற்ப தன் தந்தையை ஏமாற்றி பணம் பறித்த மோசடிக் கும்பலையே மோசடி செய்து பணத்தை மீட்டுள்ளார் தைவானைச் சேர்ந்த கூர்மதி படைத்த இளையர் ஒருவர்.
அந்த மோசடிக் கும்பலிடம் அந்த இளையரின் தந்தை இணைய முதலீட்டு மோசடி மூலம் 700,000 நியூ தைவானிய டாலரை இழந்துவிட்டதாக ‘சௌத் சைனா மார்னிங் போஸ்ட்’ செய்தி குறிப்பிட்டது.
பெண் போலப் பேசிய மோசடிப் பேர்வழி, எப்படியோ அந்த ஆடவரின் தந்தையைத் தன் வலையில் வீழ்த்தி, NT$700,000 தொகையை முதலீடு செய்ய வைத்து ஏமாற்றினார்.
தொகையைப் பெற்றதோடு மட்டுமின்றி, முன்பின் அறியாத ஒரு செயலியையும் அவரது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்ய வைத்தார் அந்த மோசடிப் பேர்வழி.
தைவானின் நேன்டோ மாநிலத்தைச் சேர்ந்த அந்தத் தந்தை, மகன் குறித்த விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.
முதலீடு NT$1.3 மில்லியனாகிவிட்டது என்றும் லாபம் NT$600,000ஆக உயர்ந்துவிட்டது என்றும் அச்செயலி காட்டியது. ஆனால், முதலீட்டுத்தொகை குறிப்பிட்ட அளவை எட்டினால் மட்டுமே அவரால் பணத்தை எடுக்க முடியும் என்றும் அது தெரிவித்தது.
இதனால் சந்தேகப்பட்ட அந்தத் தந்தை, அதுபற்றி தன் மகனிடம் பகிர்ந்துகொண்டார்.
இதனையடுத்து, எப்படியேனும் தன் தந்தையின் பணத்தை மீட்டாக வேண்டும் என உறுதிபூண்டார் அந்த இளையர்.
அதற்கு அவருக்குக் கைகொடுத்தன யூடியூப் காணொளிகள். மோசடி மூலம் இழந்த பணத்தைத் திரும்பப் பெற வேண்டுமெனில், அதைவிட அதிகமான பணம் கிடைக்கும் என மோசடிப் பேர்வழிகளுக்கு ஆசை காட்டுவதுதான் ஒரே வழி என்பதை அவர் உணர்ந்தார்.
தனக்குக் கிடைத்த லாபத்தை அறிந்து, தன் நண்பர்கள் இருவர் NT$500,000 மற்றும் NT$1 மில்லியன் முதலிட விரும்புவதாக மோசடிக் கும்பலிடம் அச்செயலி வாயிலாகவே அவர் கூறினார்.
எப்போது தன் வீட்டிற்கு வந்து பணத்தைப் பெற்றுக்கொள்கிறீர்கள் என்றும் அவர் கேட்டுள்ளார்.
இப்படி உரையாடல் சீராகப் போய்க்கொண்டிருந்த வேளையில், தனது தந்திரத்தைக் கையிலெடுத்தார் அந்த இளையர்.
இப்போதைக்குக் குடும்பச் செலவுகளுக்காக அவசரமாக NT$700,000 தேவைப்படுவதாகக் கூறிய அவர், லாபத்திலிருந்து அதனைக் கொடுக்குமாறும் கேட்டார்.
அதனை ஏற்க மோசடிக் கும்பல் முதலில் தயங்கியதாகவும் ஆனாலும் பல மணி நேரமாகப் பேசி, அவர்களை அந்த இளையர் உடன்பட வைத்ததாகவும் கூறப்பட்டது.
பெரிய தொகை கிடைக்கும் என நம்பிய மோசடிக் கும்பல், அவர் கேட்ட தொகையைக் கொடுத்துவிட்டது.
ஏமாற்றப்பட்டதை உணராத மோசடிக் கும்பல், லாபம் NT$2.35 மில்லியனாக உயர்ந்துவிட்டது என்றும் பணத்தை எடுக்க 5% முதல் 10% வரை வரி செலுத்த வேண்டும் என்றும் சொன்னது.
ஆனால், இம்முறை அந்த இளையரின் தந்தை ஏமாறவில்லை.
இச்சம்பவம் குறித்து இணையம் மூலமாக அந்த இளையர் பகிர, பின்னர் அதனை இம்மாதம் 17ஆம் தேதி தைவான் இபிசி செய்தி ஊடகம் வெளியிட்டது.
தந்தையின் பணத்தை மீட்ட மகனின் அறிவுக்கூர்மையை இணையவாசிகள் பலரும் பாராட்டி வருகின்றனர்.