உத்தரப் பிரதேசத்தில் ஆறு பேரைத் திருமணம் செய்து ஏமாற்றிய பெண் ஏழாவது மணமகனால் கைதானார்.
உத்தரப் பிரதேச மாநிலம், பண்டா மாவட்டத்தில் திருமணமாகாத ஆண்களைக் குறிவைத்து, அவர்களைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றிய பூனம் என்ற இளம்பெண்ணை காவலர்கள் கைது செய்துள்ளனர்.
பெண்ணுக்கு உடந்தையாக இருந்தவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுவரை பூனம், ஆறு பேரை திருமணம் செய்து அவர்களது வீடுகளில் இருந்த பணம், நகைகளைத் திருடிக்கொண்டு கம்பி நீட்டி விடும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
தொடர்ந்து ஏழாவதாக திருமணம் செய்ய முயன்றபோது பூனம், அவரது கூட்டாளிகளுடன் பிடிபட்டதாக பண்டா காவல்துறை அதிகாரி சிவ்ராஜ் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் மணமகனைத் தேடி வந்தார் பூனம். அவரது தாய்போல் சஞ்சனா குப்தா என்பவர் செயல்பட்டு வந்தார்.
பூனத்திற்கு விமலேஷ் வர்மா, தர்மேந்திர பிரஜாபதி ஆகிய இரண்டு தரகர்களும் மாப்பிள்ளை பார்த்து வந்தனர்.
அவர்கள், திருமணத்திற்கு நாள் குறிக்கும் முன்பு மாப்பிள்ளையிடம் கணிசமான அளவில் பணம் பெற்றுக்கொண்டு பூனத்தை திருமணம் செய்து வைப்பார்கள்.
பூனமும் நல்ல பெண் போல் திருமணம் செய்துகொண்டு அங்கு வசிப்பார்.
அடுத்த ஒரு சில நாள்களிலேயே மணமகன் வீட்டில் இருந்து பணம், நகையைச் சுருட்டிக்கொண்டு கம்பி நீட்டிவிடுவார் பூனம். இதுதான் அவர்களது வழக்கமான பணி.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம், பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் உபாத்யா என்பவர் தனக்குப் பெண் தேடிக்கொண்டிருந்தார்.
இதை அறிந்த விமலேஷ் வர்மா, சங்கரை அணுகி படித்த பெண் இருப்பதாகக் கூறி பூனத்தின் புகைப்படத்தைக் காண்பித்துள்ளார்.
பெண்ணைத் திருமணம் செய்வதற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகும் என்று கூறியுள்ளார். அதற்கு சங்கரும் சம்மதித்துள்ளார்.
கடந்த 21ஆம் தேதி சங்கரை சந்தித்த விமலேஷ், பூனத்தை மணப்பெண் எனவும் சஞ்சனாவை அவரது தாயார் எனவும் அறிமுகம் செய்து, ஒன்றரை லட்சம் பணம் கொடுத்தால் உடனே திருமணம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
ஆனால், சங்கருக்கு அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட, “பணம் தருகிறேன். ஆனால், அவர்களது ஆதார் அட்டை உட்பட அனைத்து விவரங்களும் வேண்டும்,” என்று கேட்டுள்ளார்.
அவர்கள் தருவதற்கு மறுத்துவிடவே, சந்தேகம் அதிகமான நிலையில் திருமணம் செய்வதற்கு சங்கர் மறுத்துள்ளார்.
அப்போது, பெண்ணை ஏமாற்றியதாக பொய் வழக்கில் சிக்க வைப்போம் என்று சங்கரை அந்தக் கும்பல் மிரட்டியுள்ளது.
இதையடுத்து, யோசித்து பதில் அளிப்பதாகக் கூறிவிட்டு அங்கிருந்து நழுவிய சங்கர், நேராக காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் பற்றி புகார் அளித்தார்.
இதையடுத்து மணப்பெண் பூனம், சஞ்சனா, விமலேஷ் வர்மா, தர்மேந்திர பிரஜாபதி ஆகியோரை பண்டா காவலர்கள் பிடித்து விசாரித்த போதுதான் இது திருமண மோசடிக் கும்பல் என்பது தெரியவந்தது.
பூனம் இதுவரை ஆறு பேரை திருமணம் செய்து பணம், நகையைத் திருடியதும், ஏழாவதாக சங்கரை ஏமாற்ற முயன்றபோது மாட்டிக்கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது என்று பண்டா டிஎஸ்பி சிவ்ராஜ் கூறினார்.