ஜனாதிபதி வேட்பாளர்களை நியமித்த கட்சியின் செயலாளர்கள் உட்பட 10 பேருக்கு எதிராக மோசடி விசாரணை.
தேர்தல் ஒழுங்கு சட்டத்தின் விதிகளின்படி, வருமானம், செலவு விபரங்களை முறையாக சமர்ப்பிக்காத மூன்று ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களை நியமித்த கட்சியின் செயலாளர்கள் உட்பட 10 பேருக்கு எதிராக கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அனுப்பப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, பதில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில், கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் இது தொடர்பான விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
அதன்படி, பாக்கிய செல்வம் அரியநேத்திரம், பத்தரமுல்லை சீலரதன தேரர் மற்றும் சரத் கீர்திரத்தன முதலான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அகம்பொடி பிரசங்க சுரஞ்சீவ அனோஜ் டி சில்வாவை ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்ட ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் ஆரியவன்ச திசாநாயக்க, ஜயந்தீச வீரசிங்க முதியன்சேலகே ஜனக பிரியந்த குமார ரத்நாயக்கவை ஜனாதிபதி வேட்பாளராக பெயரிட்ட ,
ஐக்கிய இலங்கை தேசியக் கட்சியின் செயலாளர் சரச்சந்திர வீரவர்தன, ராஜபக் ஷ ஆராச்சிலாவிலாகே நாமல் அஜித் ராஜபக் ஷவை, ஜனாதிபதி வேட்பாளராக பெயரிட்ட சமபிமா கட்சியின் செயலாளர் தீப்தி குமார குணரத்ன, சங்கைக்குரி பத்தரமுல்லே சீளரதன தேரரை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் சங்கைக்குரிய பத்தரமுல்லே சீளரதன தேரர்,
அபுபக்கர் மொஹமட் இன்பாஸை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்த , ஐக்கிய ஜனநாயகக் கூட்டமைப்பின் செயலாளர் இசட் எம். ஹிதாயதுல்லா உள்ளிட்ட 05 கட்சியின் செயலாளர்கள் தொடர்பாகவும் இவ்வாறு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.