சிறை அதிகாரிகளால் தாக்குதலுக்கு உள்ளான கைதி மரணம் (Video)
நியூயார்க் மாநிலத்தைச் சேர்ந்த சட்டத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர் 27) சிறை அதிகாரிகள், கைதி ஒருவரை சரமாரியாகத் தாக்கும் காணொளியை வெளியிட்டுள்ளனர்.
அதிகாரிகளால் தாக்கப்பட்ட அந்த சிறைக் கைதி பின்னர் இறந்துவிட்டார் . இறந்தவரின் பெயர் ராபர்ட் புரூக்ஸ் என்றும் அவர் கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தாக்குதல் சம்பவம் டிசம்பர் 9ஆம் தேதி நடந்தது. சிறை அதிகாரிகள் அவர்கள் அணிந்திருந்த சீருடையில் இருந்த கேமராவில் தாக்குதல் சம்பவம் பதிவாகியிருந்தது.
43 வயது ராபர்டை மூன்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் தாக்குவதும், ராபர்ட் முகத்தில் ரத்தம் வருவதையும் அவரின் கழுத்தை அதிகாரி ஒருவர் நெரிப்பதையும் காணொளியில் பார்க்க முடிந்தது.
12 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட் அன்றிரவே இறந்துவிட்டார்.
காணொளியைக் கண்ட ராபர்ட் குடும்பத்தினர், நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.
காணொளியில், மருத்துவமனை படுக்கை ஒன்றில் ராபர்ட்டை படுக்க வைத்து அதிகாரிகள் தாக்கினர். பின்னர் ஒரு நாற்காலியில் அவரை உட்கார வைத்து அடித்ததைப் பார்க்க முடிந்தது.
அதன் பின்னர் ராபர்ட் கட்டிலில் இருந்து இழுத்து செல்லப்பட்டார்.
ராபர்ட் கழுத்து நெரிக்கப்பட்டதால் மூச்சுவிட முடியாமல் இறந்ததாக உடல்கூராய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு உடல்கூராய்வு அறிக்கை இன்னும் வெளியாகவில்லை.
நியூயார்க் ஆளுநர் கேத்தே ஹோச்சல் இச்சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ளார்.
2020ஆம் ஆண்டு ஜார்ஜ் பிளாய்ட் என்னும் கறுப்பின ஆடவர் காவல்துறை அதிகாரியின் கடுமையான நடவடிக்கையால் சாலையிலேயே இறந்தார். அது அமெரிக்காவில் பெரும் போராட்டத்தை ஏற்படுத்தியது.