அசர்பைஜான் விமானம், சமீபத்தில் விபத்தில் சிக்கியது குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வருத்தம்.

அசர்பைஜான் விமானம், சமீபத்தில் விபத்தில் சிக்கியது குறித்து அந்நாட்டு அதிபர் இல்ஹாம் அலியேவிடம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வருத்தம் தெரிவித்து விளக்கமளித்துள்ளார்.

ஐரோப்பிய நாடான அசர்பைஜான் தலைநகர் பாகுவில் இருந்து, ரஷ்யாவின் க்ரோஸ்னி நகருக்கு, அசர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின், ‘எம்ப்ரேயர் — 190’ ரக பயணியர் விமானம் கடந்த 25ம் தேதி புறப்பட்டது.

மத்திய ஆசிய நாடான கஜகஸ்தான் வான் பரப்பில் இந்த விமானம் பறந்தபோது, அக்தாவ் நகரில் தரையிறங்க முயற்சித்தது. அடுத்த சில நிமிடங்களில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது.

இரு பாகங்களாக, விமானம் உடைந்த நிலையில், இரு விமானியர் உட்பட 38 பேர் இந்த கோர விபத்தில் பலியாகினர். இரண்டு குழந்தைகள் உட்பட 29 பயணியர், படுகாயங்களுடன் உயிர்பிழைத்தனர்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், உக்ரைன் இடையிலான போரில், ரஷ்ய வான்படைகள் தவறுதலாக இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என செய்திகள் பரவின. இதற்கு, ரஷ்யா எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், விமான விபத்து குறித்து அசர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவிடம், ரஷ்ய அதிபர் புடின் வருத்தம் தெரிவித்ததாக, ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுஉள்ளதாவது:

ரஷ்ய வான்வெளியில் நடந்த துயர சம்பவத்திற்கு, அசர்பைஜான் அதிபரிடம், விளாடிமிர் புடின் மன்னிப்பு கோரினார்.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு, மீண்டும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக அவர் கூறினார்.

விபத்து நடப்பதற்கு முன்னதாக, ரஷ்யாவின் க்ரோஸ்னி நகரில், இந்த விமானம் பலமுறை தரையிறங்க முயற்சித்தது. இதற்காக விமானி அனுமதி கோரினார்.

ஆனால் அப்போது, குரோஸ்னி, மோஸ்டாக், விளாடிகவாக்ஸ் நகரங்களில் உக்ரைன் ராணுவம் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தியது. இதை முறியடிக்கும் நடவடிக்கைகளில் ரஷ்ய வான் பாதுகாப்புப் படை ஈடுபட்டிருந்தது.

இதனால், விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்க அனுமதி அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதற்காக அதிபர் புடின் மன்னிப்பு கோரிஉள்ளார். விபத்து குறித்த விசாரணைக்கு ரஷ்யா முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.