ஜெர்மனியின் பார்லிமென்டை திடீரென கலைக்க உத்தரவிட்ட அந்நாட்டு அதிபர் பிராங்க் வால்டர் ஸ்டெயின்மியர்.

ஜெர்மனியின் பார்லிமென்டை திடீரென கலைக்க உத்தரவிட்ட அந்நாட்டு அதிபர் பிராங்க் வால்டர் ஸ்டெயின்மியர், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் ‘தி கிரீன்ஸ்’ மற்றும் சுதந்திர ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைத்து சோஷியல் ஜனநாயக கட்சி ஆட்சி அமைத்தது. ஆளுங்கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சுதந்திர ஜனநாயகக் கட்சி, தன் ஆதரவை சில மாதங்களுக்கு முன் திரும்பப் பெற்றது. இதனால், ஜெர்மனி அரசியலில் குழப்பம் ஏற்பட்டது.

இந்த சூழலில் பிரதமர் ஓலாப் ஸ்கோல்சுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சமீபத்தில், இதற்கான ஓட்டெடுப்பு அந்நாட்டு பார்லி.,யில் நடந்தது.
இதில், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 394 உறுப்பினர்கள் ஓட்டளித்தனர்.

இதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து ஓலாப் ஸ்கோல்ஸ் விலகினார். ஆட்சியில் இருந்த அரசு கவிழ்ந்ததை அடுத்து, முன்கூட்டியே தேர்தலை நடத்தும்படி அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.

இந்த சூழலில், பார்லி மென்டை கலைப்பதாக, அந்நாட்டு அதிபர் பிராங்க் வால்டர் ஸ்டெயின்மர் நேற்று அறிவித்தார். பார்லி., கலைக்கப்பட்டு 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என அந்நாட்டில் விதி உள்ளதால், வரும் பிப்., 23ல் தேர்தல் நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார்.

பெர்லினில் உள்ள பெல்லோவ் அரண்மனையில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டு பேசிய அதிபர் ஸ்டெயின்மர், ”நாட்டிற்கு தற்போது நல்ல திறன் உடைய அரசு மற்றும் பார்லி.,யில் நம்பகமான பெரும்பான்மை தேவைப்படுகிறது. ”இதன் காரணமாகவே தேர்தலை முன்கூட்டியே நடத்த உள்ளோம். இந்த தேர்தல் நியாயமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்தப்பட வேண்டும். ”தேர்தல் பிரசாரத்தில் வெறுப்பு மற்றும் வன்முறைக்கு எப்போதும் இடமில்லை, அவமதிப்பு, மிரட்டல் போன்றவை ஜனநாயகத்திற்கு விஷம்,” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.