நியூஸிலாந்துக்கு எதிராக முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓட்டங்களால் இலங்கை தோல்வி அடைந்தது.
நியூஸிலாந்துக்கு எதிராக மவுன்ட் மௌங்கானுய், பே ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற மிகவும் பரபரப்பான முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓட்டங்களால் இலங்கை தோல்வி அடைந்தது.
மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களும் கடைசிச் கட்ட ஓவர்களில் பந்துவீச்சாளர்களும் கோட்டை விட்டதாலேயே இலங்கை தோல்வியைத் தழுவி நேரிட்டது.
நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 173 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
இப் போட்டியில் பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி 81 பந்துகளில் 121 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஆனால், அவர்கள் இருவரும் அதே மொத்த எண்ணிக்கையில் ஆட்டம் இழந்ததும் இலங்கையின் வெற்றிக்கான எதிர்பார்ப்பு தவிடுபொடியானது.
36 பந்துகளில் 46 ஓட்டங்களைப் பெற்ற குசல் மெண்டிஸ் முதலாவதாக ஆட்டம் இழந்தார்.
ஆரம்பத்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பெத்தும் நிஸ்ஸன்க 60 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 90 ஓட்டங்களைப் பெற்றார்.
அதன் பின்னர் விக்கெட்கள் அடுத்தடுத்து விழத் தொடங்கின.
இதன் காரணமாகவே இலங்கை தோல்வியைத் தழுவியது.
இந்தப் போட்டியிலும் குசல் பெரேரா, பானுக்க ராஜபக்ஷ ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியதால் அடுத்த போட்டியில் அவர்கள் இருவரையும் நீக்கிவிட்டு அவிஷ்க பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால் ஆகியோருக்கு தேர்வாளர்கள் வாய்ப்பு கொடுப்பதே சிறந்தது என கிரிக்கெட் விமர்சர்கள் தெரிவித்துள்ளனர்