தென்கொரிய விமான விபத்தில் இருவர் உயிர் தப்ப ; 179 பேர் மரணம் (Video)

தாய்லாந்திலிருந்து தென்கொரியாவுக்கு 181 பேரை ஏற்றிச்சென்ற ஜேஜு ஏர் விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதில் 179 பேர் மாண்டுவிட்டனர். தென்கொரியாவின் முவான் (Muan) அனைத்துலக விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) நேர்ந்த விபத்தில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

தென்கொரியாவின் இடைக்கால அதிபர் சோய் சுங் மொக் ஜனவரி 4ஆம் தேதி வரை 7 ஏழு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். உயிர் தப்பிய இருவரும் விமான ஊழியர்கள். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக உள்ளூர் பொது மருத்துவ நிலையத் தலைவர் தெரிவித்துள்ளார்.

பறவை ஒன்று மோதியதும் மோசமான பருவநிலையும் விபத்துக்குக் காரணம் என்று அதிகாரிகள் குறிப்பிட்டதாக ஏஎஃப்பி செய்தி தெரிவித்தது. விமானம் மோதிய வேகத்தில், பயணிகள் தூக்கி வீசப்பட்டனர் விமானம் முற்றாகச் சிதைந்தது என்று தீயணைப்புப் படையினர் குறிப்பிட்டனர்.

விமான ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற விமானம் சுவர் மீது மோதி தீப்பற்றுவதற்கு முன்னர் அதன் இயந்திரங்களிலிருந்து புகை கிளம்பியதைக் காணொளிக் காட்சிகள் காட்டின.

“விமானம் சுவரில் மோதியதும் பயணிகள் வெளியே வீசப்பட்டனர், உயிர்பிழைக்கும் வாய்ப்பு மிகக் குறைவாகவே இருந்தது,” என்று உள்ளூர் தீயணைப்பு அதிகாரி ஒருவர் குடும்பங்களிடம் கூறியதாக தீயணைப்புப் படை வெளியிட்ட செய்தி தெரிவித்தது. விமானம் கிட்டத்தட்ட முழுமையாக அழிந்துபோய்விட்டதாகவும் மாண்டோரை அடையாளம் கண்டு மீட்பது சவாலாக இருந்தது என்றும் அவர் கூறினார்.

எரிந்த ஜேஜு ஏர் போயிங் 737-800 விமானம் முவான் விமான நிலைய ஓடுபாதையில் இருப்பதையும் அருகில் தீயணைப்பாளர்களும் அவசர உதவி வாகனங்கள் காணப்பட்டதையும் ஏஎஃபி புகைப்படக்காரர் கண்டார். உடல்களை எடுத்துச் செல்ல அமரர் ஊர்திகள் வெளியில் வரிசை பிடித்து நின்றன. தற்காலிக பிணவறை அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த அந்த ஜேஜு ஏர் (Jeju Air) எண் 7C 2216 விமானத்தில் 175 பயணிகளும் ஊழியர்கள் அறுவரும் இருந்தனர் என்று யோன்ஹாப் செய்தி குறிப்பிட்டது. பயணிகளில் தாய்லாந்து நாட்டவர் இருவரும் அடங்குவர். உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி 8 மணி) விமானம் தரையிறங்கியது. அடுத்த மூன்று நிமிடங்களில் சுவரில் மோதியது.

விபத்து நடந்த இடத்தில் எண்ணெய் வாடையும் ரத்த வாடையும் வீசுவதாக நேரில் பார்த்த ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் குறிப்பிட்டனர். ராணுவ வீரர்கள் புதர்களில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் ஊழியர்கள் பாதுகாப்பு உடை, முகக்கவசத்துடன் காணப்பட்டதாகவும் ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டது.

விமானத்தின் முக்கியப் புள்ளி விவரங்கள், செயல்திறன் அளவீடுகளைக் கொண்டிருக்கும் விமான தரவுப் பதிவு (ரெக்கார்டர்), விமானி அறை உரையாடல்கள், ஒலிகளைப் பதிவு செய்யும் குரல் பதிவு இரண்டும் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மலிவுக் கட்டண பயணி விமான சேவையான ஜேஜு ஏர், முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்க உறுதியளித்துள்ளது.

“கவலை ஏற்படுத்தியதற்காக மனதார மன்னிப்புக் கோருகிறோம், ” என்று விமான நிறுவனம் சமூக ஊடகத் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

போயிங் நிறுவனம் ஜெஜு ஏர் நிறுவனத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், “அவர்களுக்கு ஆதரவு அளிக்க தயாராக உள்ளதாகவும்” தெரிவித்துள்ளது.

பாதுகாப்பைப் பொறுத்தவரை தென்கொரியாவின் விமானத் துறை மிகவும் வலுவாக இருந்து வந்துள்ளதாக வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜேஜு ஏர், 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்விபத்துக்கு அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கிம் இ பே பாதிக்கப்பட்டோரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளான சில நாள்களிலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது.

இதற்கிடையே, அதிகாரிகள் விசாரணையை முடித்தவுடன் விபத்து நிகழ்ந்ததற்குப் பின்னால் உள்ள சரியான காரணத்தை அறிவிக்கப்போவதாக தென்கொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பறவையுடன் ஏற்பட்ட மோதல், விமானக் கருவிகளில் ஏற்பட்ட கோளாறு போன்ற காரணங்களால் இவ்விபத்து நேர்ந்ததாகக் கூறப்பட்டு வந்தது. அதனால் கவனமாக ஆராயப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.