பஞ்சாபில் முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்
விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பஞ்சாபில் விவசாயிகள் இன்று முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பயிா்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் உள்ள கனெளரி பகுதியில் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இங்கு ஜகஜீத் சிங் தலேவால்(70) என்ற விவசாயி, கடந்த நவம்பா் 26 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளாா்.
இன்று 35-வது நாளாக அவரது உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது. அவரின் உடல்நிலை மோசமாக இருப்பதால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஜகஜீத் சிங் தலேவாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் விவசாயிகள் இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
அதன்படி, பஞ்சாப் – ஹரியாணா எல்லையில் பல இடங்களில் விவசாயிகள் டிராக்டர்களில் பேரணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலைகளில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 150-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அமிர்தசரஸ், பாட்டியாலா – சண்டீகர் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்டப் பகுதிகளில் போராட்டம் நடைபெறுகிறது. பஞ்சாபில் ஒரு ரயில்கூட இன்று இயக்கப்படவில்லை. மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.