விஜய் சேதுபதியின் கோரிக்கயை பரிசீலிக்க அமைச்சர் அன்பில் மகேஸ் முடிவு.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றைப் பாட நூலில் சேர்க்க வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
திரு நல்லகண்ணுவின் நூறாம் ஆண்டுப் பிறந்தநாள் விழா சென்னைக் கலைவாணர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 30) நடைபெற்றது.
அதில் பங்கேற்ற விஜய் சேதுபதி, “இன்று பலர் தோளில் துண்டு போடுவதும், காலில் செருப்பு போடுவதும், தீபாவளி, பொங்கல் போனஸ் பெறுவதும், 8 மணி நேரம் மட்டுமே வேலை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை போன்றவையும் நல்லகண்ணு மாதிரியான பல தோழர்கள் பெற்றுத் தந்தவை.
“அதிகாரத்தால் கொடுமைப்படுத்தப்பட்டும் அவர்கள் போராடி, ரத்தம் சிந்தி, வாங்கிக் கொடுத்தது என்பது எத்தனை பேருக்குத் தெரியும். அவற்றைத் தெரிந்துகொள்ளாதவர்களில் நானும் ஒருவனாகத்தான் இருந்தேன். ஆனால், அதனால் பலனடைந்த பலகோடி பேரில் நானும் ஒருவன்.
“நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு பாடப் புத்தகத்தில் இருக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை நானும் தமிழ்நாட்டு அரசிடம் முன்வைக்கிறேன். அதன்வழியாக அவரது சிந்தனையும் தியாக வாழ்க்கையும் பலரையும் சென்றடைய வேண்டும்,” என்று பேசியிருந்தார்.
இந்நிலையில், அவரது கோரிக்கை தொடர்பில் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எக்ஸ் தளம் வழியாகப் பதிலளித்துள்ளார்.
“விடுதலைப் போராட்ட வீரர் போற்றுதலுக்குரிய நல்லகண்ணு ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பள்ளி மாணவர்கள் அறிந்துகொள்ளும் நோக்கில், அவரின் வாழ்க்கைக் குறிப்பை பாடப்புத்தகத்தில் இணைப்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சரின் ஆலோசனையைப் பெற்று முடிவு செய்யப்படும்,” என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.