இந்தியாவுக்கு எதிராக 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா 184 ஓட்டங்களால் வெற்றி.

இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட போர்டர் – காவஸ்கர் டெஸ்ட் தொடரில் 2 – 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது. இந்தியாவுக்கு எதிராக 4ஆவது டெஸ்டில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா 61.46 சராசரி புள்ளிகளுடன் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது .

இந்தியாவுக்கு எதிராக இன்னும் ஒரு டெஸ்ட் போட்டியும் இலங்கைக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளும் அவுஸ்திரேலியாவுக்குஇருக்கிறது. அவற்றில் ஏதாவது ஒன்றில் வெற்றிபெற்றால் நடப்பு உலக டெஸ்ட் சம்பயினாக அவுஸ்திரேலியா இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெறும்.

இது இவ்வாறிருக்க, முதல் இரண்டு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அத்தியாயங்களின் இறுதிப் போட்டியில் விளையாடி இரண்டு சந்தர்ப்பங்களிலும் தோல்வி அடைந்த இந்தியா, இம்முறை இறுதிப் போட்டிக்கு செல்லும் நம்பிக்கையை இழந்துள்ளது. மெல்பர்னில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடைநிலை வீரர்களின் துணிச்சலான துடுப்பாட்டங்களே அவுஸ்திரேலியா வெற்றிபெறுவதற்கு உதவின.

முதலாவது இன்னிங்ஸில் 299 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்கள் எனவும் இரண்டாவது இன்னிங்ஸில் 91 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்கள் எனவும் அவுஸ்திரேலியா பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டிருந்தது.

இரண்டு சந்தர்ப்பங்களிலும் இந்தியாவின் கைகளிலிருந்த ஆட்டத்தை கடைநிலை வீரர்களின் திறமையான துடுப்பாட்டங்கள் அவுஸ்திரேலியாவுக்கு சாதகமாக திரும்புவதற்கு உதவின. முதலாவது இன்னிங்ஸில் ஸ்டீவன் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த 8ஆம் இலக்க வீரர் 112 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலிய அணியைப் பலப்படுத்தினர்.

இரண்டாவது இன்னிங்ஸிலும் மானுஸ் லபுஷேன், பெட் கமினஸ் ஆகியோர் 7ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 57 ஓட்டங்களும் நேதன் லயன, ஸ்கொட் போலண்ட் ஆகியோர் கடைசி விக்கெட்டில் பகிர்ந்த 61 ஓட்டங்களும் அவுஸ்திரேலியாவின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

அதேவேளை, முதல் இன்னிங்ஸில் நிட்டிஷ் குமார் ரெட்டி, வொஷிங்டன் சுந்தர் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டங்கள் இந்தியாவை தோல்வியிலிருந்து மீட்பதற்கு போதுமானதாக அமையவில்லை.

போட்டியின் கடைசி நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை 9 விக்கெட் இழப்புக்கு 228 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த அவுஸ்திரேலியா மேலும் 6 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் கடைசி விக்கெட்டை இழந்தது. இந்திய பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 5 விக்கெட்களை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 13ஆவது ஐந்து விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார்.

இதனைத் தொடர்ந்து 340 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா சகல விக்கெட்களையும் இழந்து 155 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது. இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் யஷஸ்வி ஜய்ஸ்வால் (84), ரிஷாப் பான்ட் (30) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். அவர்கள் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 88 ஓட்டங்களைப் பகிர்ந்திராவிட்டால் இந்தியாவின் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.