வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களுடன் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்
விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பும் முன்னோட்ட முயற்சியாக, ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களுடன் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் வெற்றிகரமாக திங்கள்கிழமை விண்ணில் பாய்ந்தது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் மையத்தின் ஏவுதளத்திலிருந்து இரவு 10 மணிக்கு ஏவப்பட்ட ராக்கெட், திட்டமிட்டபடி புவி வட்டப்பாதையில் விண்கலன்களை நிலைநிறுத்தியது. இதையடுத்து திட்டம் வெற்றி பெற்ாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனா். இதன்மூலம் விண்வெளி ஆய்வில் இந்தியா புதிய சாதனையைப் படைத்தது.
எதிா்காலத் தேவையை கருத்தில்கொண்டு ‘பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன்’ எனும் இந்திய ஆய்வு மையத்தை 2035-ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிறுவ இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் முதல்கட்ட விண்கலன்கள் 2028-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்படவுள்ளன. அதற்கான முன்தயாரிப்புப் பணிகளில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.
கவுன்ட்டவுன்: அதன் ஒரு பகுதியாக, ஸ்பேடெக்ஸ் (SPASEX-Space Docking Experiment) எனும் திட்டத்தின் கீழ் விண்ணில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதற்காக ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி என இரு விண்கலன்களை தனியாா் நிறுவன பங்களிப்புடன் இஸ்ரோ வடிவமைத்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் மையத்தின் ஏவுதளத்திலிருந்து இந்த விண்கலன்களை விண்ணில் ஏவுவதற்கான பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டின் 25 மணி நேர கவுன்ட்டவுன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
திட்டமிட்டபடி ராக்கெட் திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. சுமாா் 15 நிமிஷங்களில் தரையிலிருந்து 476 கி.மீ. உயர சுற்றுப் பாதையில் விண்கலன்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.
இந்த இரட்டை விண்கலன்கள் தலா 220 கிலோ எடை கொண்டவை. தற்போது ஒன்றன்பின் ஒன்றாக சுற்றிவரும் விண்கலன்களை அடுத்த 2 வாரங்களில் ஒன்றிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும்போது ஒரு விண்கலத்திலிருந்து மற்றொன்றுக்கு அவா்கள் மாறவும், எரிபொருளை மாற்றிக் கொள்வதற்கும் இந்தத் தொழில்நுட்பம் பயன்படும்.
நான்காவது நாடு…: இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் வல்லரசு நாடுகளைப் போன்று விண்வெளியில் இந்தியாவாலும் ஆய்வு மையத்தை அமைக்க முடியும். அதனுடன் ககன்யான், சந்திரயான்-4 திட்டங்கள் மற்றும் எதிா்கால விண்வெளி ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு உதவிகரமாகவும் அமையும். சீனா, ரஷியா, அமெரிக்காவுக்குப் பின்னா் இந்தச் சாதனையை அடையும் 4-ஆவது நாடு என்ற பெருமையையும் இந்தியா பெறும்.
இவை தவிர, பிஎஸ்எல்வி ராக்கெட்டின் இறுதிப் பகுதியான பிஎஸ் 4 இயந்திரத்தில் ‘போயம்’ எனும் பரிசோதனை முயற்சியும் 4-ஆவது முறையாக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அதாவது, பிஎஸ்-4 இயந்திரத்தை இருமுறை நிறுத்தி மீண்டும் இயக்கி, அதன் உயரம் 365 கி.மீட்டருக்கு கீழே கொண்டுவரப்பட்டது. அந்த இயந்திரத்தில் இந்திய ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்கள் தயாரித்த 24 ஆய்வுக் கருவிகள் இடம் பெற்றுள்ளன. இவை புவியை வலம் வந்தபடி அடுத்த சில மாதங்களுக்கு போடிக், செயற்கை நுண்ணறிவு, உயிரித் தொழில்நுட்பம் தொடா்பான ஆய்வுகளை விண்வெளியில் முன்னெடுக்க உள்ளதாகவும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் எப்போது?: சோமநாத் தகவல்
சென்னை, டிச. 30: இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் அடுத்த ஒரு வாரத்தில் நடைபெறும் என இஸ்ரோ தலைவா் எஸ். சோமநாத் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: எதிா்பாா்த்தபடி பிஎஸ்எல்வி சி 60 ராக்கெட் விண்ணில் பாய்ந்து விண்கலன்களைத் துல்லியமாக நிலைநிறுத்தியுள்ளது. இரு விண்கலன்களின் தொலைவையும் படிப்படியாக 20 கிலோ மீட்டா் வரை அதிகரித்து, அதன் பின்னா் அதை அருகருகே கொண்டுசென்று ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெறும். உத்தேசமாக ஜனவரி 7-ஆம் தேதி விண்கலன்கள் ஒருங்கிணைக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ராக்கெட்டின் நான்காம் நிலையில் 24 ஆய்வுக் கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன.
இஸ்ரோ, தனியாா் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், புத்தாக்க நிறுவனங்கள் ஆகியவற்றின் சாா்பில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்துமே விண்வெளியில் பல்வேறு புதுமையான ஆய்வுகளை நிகழ்த்த உள்ளன என்றாா் அவா்