சுவிஸ் விமானம் அவசரமாகத் தரையிறக்கம்: விமானப் பணியாளர் மரணம்.
ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட்டில் இருந்து சுவிட்சர்லாந்தின் ஸூரிக் நகருக்கு டிசம்பர் 23ஆம் தேதி வந்துகொண்டிருந்த ஏர்பஸ் ஏ220-300 விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு விமானத்தினுள் புகை சூழ்ந்ததைத் தொடர்ந்து, ஆஸ்திரியாவின் கிராஸ் நகரில் அது அவசரமாகத் தரையிறங்கியது.
பாதுகாப்பாகத் தரையிறங்கிய அந்த விமானத்தில் 74 பயணிகளும் 5 பணியாளர்களும் இருந்தனர்.
இந்நிலையில், சுவிஸ் வெளியிட்ட அறிக்கையில், “எங்கள் இளம் பணியாளர் மருத்துவமனையில் இறந்துவிட்ட செய்தியை நாங்கள் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்,” என்று கூறியது.
இயந்திரக் கோளாறு காரணமாக சுவிஸ் விமானம் அவசரமாகத் தரையிறங்கியதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விமானப் பணியாளர் இறந்துவிட்டதாக சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் திங்கட்கிழமை (டிசம்பர் 30) தெரிவித்தது.
இந்த இழப்பு, சுவிஸ் விமான நிறுவனத்தை அதிர்ச்சிக்கும் துயரத்திற்கும் உள்ளாக்கியதாக அதன் தலைமை நிர்வாகி ஜென்ஸ் ஃபெலிங்கர் சொன்னார்.
“எங்கள் பணியாளரின் மரணத்தால் நாங்கள் மனமுடைந்து போயுள்ளோம்.
“எங்கள் எண்ணங்கள் அவரின் குடும்பத்தாருடன் உள்ளன. அவர்களின் வலியை எங்களால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. சுவிஸ் நிறுவனத்தில் அனைவரின் சார்பாகவும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
“இந்தச் சிரமமான தருணத்தில் அவர்களுக்கு எங்களால் ஆன அனைத்து உதவியையும் வழங்குவோம்,” என்றார் அவர்.
“எங்கள் பணியாளரின் குடும்பத்தாருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர் பற்றிய விவரங்களையோ மரணத்துக்கான காரணத்தையோ நாங்கள் வெளியிட மாட்டோம்,” என்று சுவிஸ் அதன் அறிக்கையில் சொன்னது.