நாளை ஐந்தாவது டெஸ்ட் ஆரம்பமாகவுள்ள நிலையில், பயிற்சியாளர் காம்பிர், துணை பயிற்சியாளர்கள் செயல்பாடு மீது அதிருப்தி.
இந்திய அணியின் தொடர் தோல்விகளால் அணியில் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது. நாளை ஐந்தாவது டெஸ்ட் துவங்க உள்ள நிலையில், பயிற்சியாளர் காம்பிர், துணை பயிற்சியாளர்கள் செயல்பாடு மீது, கவனம் திரும்பியுள்ளது.
ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி ஐந்து போட்டி கொண்ட ‘பார்டர்-கவாஸ்கர்’ டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் மட்டும் இந்தியா வென்றது. அடிலெய்டு, மெல்போர்னில் தோற்க (பிரிஸ்பேன் டெஸ்ட் ‘டிரா’) தொடரில் 1-2 என பின்தங்கியுள்ளது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு நிர்வாக ஒருவர் கூறுகையில்,” சிட்னி டெஸ்ட், அடுத்து சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரவுள்ளது. இதில் சிறப்பாக செயல்படவில்லை என்றால் காம்பிரின் பயிற்சியாளர் பதவிக்கு சிக்கல் ஏற்படும்,” என்றார்.
மெல்போர்ன் தோல்விக்குப் பின் ‘டிரசிங் ரூமில்’ பயிற்சியாளர் காம்பிர், வீரர்களை எச்சரித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், ”சூழ்நிலைக்கு ஏற்ப யாரும் விளையாடவில்லை. தங்களது வழக்கமான ஆட்டத்தை விளையாடி, அணியின் திட்டத்தை ஏற்க மறுக்கின்றனர். கடந்த ஆறுமாதம் அனைவருக்கும் முழு சுதந்திரம் கொடுத்தேன். இனிமேல் போட்டியின் திட்டப்படி தான் விளையாட வேண்டும். இதை ஏற்க மறுத்தால் நீக்கப்படுவீர்கள்,” என எச்சரித்துள்ளார்.