வீரபாண்டிய கட்டபொம்மன் தமிழன் இல்லையா ?” : ஜோன் துரை செல்லையா

“நிஜமாகவா சொல்கிறீர்கள் ? வீரபாண்டிய கட்டபொம்மன் தமிழன் இல்லையா ?”

“இல்லை. கட்டபொம்மனின் தாய்மொழி தெலுங்கு. அவன் ஆவேசமாக ஆங்கிலேயர்களுடன் வாதாடியதும் தெலுங்கு மொழியில்தானாம்.”

“அப்படியானால் கட்டபொம்மன் படத்தில் நாம் பார்த்து ரசித்த அந்த வசனங்கள் எல்லாம்…?”

“எந்த வசனம்..?”

“வானம் பொழிகிறது, பூமி விளைகிறது…
உனக்கேன் கொடுப்பது கிஸ்தி!”

“கற்பனையே !”

“கற்பனையா ?

‘கற்றுக் கொடுக்கும் இனம் தமிழ் இனம்,
நீர் கற்றுக் கொடுக்க நினைப்பது அறிவீனம்’
என்ற வசனம்…?”

“கற்பனைதான்.”

“அப்புறம்… சிவாஜி இப்படியெல்லாம் பேசுவாரே…
‘நான் மன்னிப்பு கேட்பதா?
என் தமிழ்ப்புலவன் மட்டும் இங்கு இருந்திருந்தால்,
அறம் பாடியே உன் ஆவியை கருக்கியிருப்பான்.
வீரத் தமிழ்குலப் பெண்மணி, என் மனைவிக்கு மட்டும் இது புரிந்திருந்தால்,
இந்நேரம் உன் உடல் தீப்பற்றி எரிந்திருக்கும்.’
இந்த வசனங்கள் எல்லாம்…?”

“கற்பனையே. அப்படி ஒருவேளை வீரபாண்டிய கட்டபொம்மன் இதையெல்லாம் பேசியிருந்தால் தெலுங்குப் புலவன், தெலுங்குப் பெண்மணி என தெலுங்கில்தான் பேசியிருப்பார்.”

“அட கடவுளே ! ஆனால் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை பார்த்துவிட்டு இத்தனை காலம் அவரை ஒரு வீரத்தமிழன் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்.”
“நீங்கள் மட்டுமல்ல. நம்மில் நிறையப் பேர் இன்னமும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.”

“இது எல்லாம் தெரிந்துமா சிவாஜி வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் நடித்துக் கொடுத்தார் ?”
அவர் 1959 ல் அந்தப் படத்தில் நடித்தது மட்டும் பெரிய விஷயம் அல்ல.

1970 ல் கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தையும், அதன் அருகிலும்
உள்ள 47 சென்ட் நிலத்தையும் தானே வாங்கி தன் சொந்த செலவில் அங்கு கட்டபொம்மனுக்கு ஒரு சிலையையும் அமைத்து கொடுத்திருக்கிறார் சிவாஜி கணேசன்.

ஏனெனில் சிவாஜியை பொறுத்தவரை தமிழன், தெலுங்கன், கன்னடத்துக்காரன், மலையாளி என்பதெல்லாம் கிடையாது. தெரியாது.

“இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
எல்லா மக்களும் என் உறவு
எல்லோர் மொழியும் என் பேச்சு”
இதுதான் சிவாஜி !
இதைப் போல ஒரு அக்டோபர்
மாதத்தில்தான்
(அக்டோபர் 16 1799)

திருநெல்வேலிக்கு அருகிலுள்ள கயத்தாறில் ஆங்கிலேயர்களால்
புளியமரம் ஒன்றில் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டான்
வீரபாண்டிய கட்டபொம்மன்.

எது எப்படியோ,
தமிழ் உள்ளவரை வீரபாண்டிய கட்டபொம்மனையும் நாம் மறக்க முடியாது.

அந்தக் கதாபாத்திரத்தை உயிரோடு நம்முன் உலவ வைத்த சிவாஜியையும் நம்மால் மறக்கவே முடியாது.

                                                                                                                    ஆக்கம் : John Durai Asir Chelliah

Leave A Reply

Your email address will not be published.