செஸ் வீரர் குகேஷ், மனு பாக்கர் உள்பட 4 பேருக்கு கேல் ரத்னா விருது!

தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு கேல் ரத்னா விருதை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் மற்றும் பாராலிம்பிக்ஸ் வீரர் பிரவீண் குமார் ஆகியோருக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜனவரி 17 அன்று காலை 11 மணிக்கு நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விருதுகளை வழங்கவுள்ளார்.

டி குகேஷ்

தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரரான டி குகேஷ், கடந்த மாதம் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் பெற்றார்.

இளம் வயதில் உலக சாம்பியன் விருதை வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றார்.

மனு பாக்கர்

ஹரியாணா மாநிலத்தை சேர்ந்த துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனையான மனு பாக்கர், கடந்தாண்டு பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.

ஒரே ஒலிம்பிக் தொடரில் இரண்டு பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.

இவரது பெயர் கேல் ரத்னா விருதுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெறவில்லை என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹர்மன்பிரீத் சிங்

இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டனான ஹர்மன்பிரீத் சிங், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். பாரீஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில், வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியை வழிநடத்தியவர்.

முன்னதாக டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் விளையாடியவர். ஆசியக் கோப்பை, ஆசிய சாம்பியன்ஷிப் உள்ளிட்ட போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

பிரவீண் குமார்

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரவீன் குமார், பாராலிம்க்ஸ் தடகள வீரர். பாரீஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப் பதக்கமும், டோக்கியோவில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.