கேரளாவில் 15 அடி உயர மேடையில் இருந்து தவறி விழுந்த பெண் எம்எல்ஏ ஆபத்தான நிலையில் …(Video)
கேரளாவின் கொச்சி நகரில் 15 அடி உயர மேடையில் இருந்து தவறி விழுந்த பெண் எம்எல்ஏ உமா தாமஸ் படுகாயம் அடைந்தார்.
கேரளாவின் கொச்சி நகரில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கத்தில் கின்னஸ் சாதனை பரத நாட்டிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதன்படி சுமார் 12,000-க்கும் மேற்பட்ட பரத நாட்டிய கலைஞர்கள் நேற்று முன்தினம் நடனம் ஆட இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் திருக்காட்கரை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ உமா தாமஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விஐபிக்களுக்காக சுமார் 15 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மேடையில் அவர் அமர்ந்திருந்தார். அரங்கத்தில் இருந்த ஆதரவாளர்கள் அவரை நோக்கி கையசைத்தனர். உமா தாமஸ் இருக்கையில் இருந்து எழுந்து இன்னொரு பகுதி இருக்கைக்கு ஒருவரால் மாறி உட்கார சொன்னபோது எதிர்பாராதவிதமாக மேடையில் இருந்து அவர் தவறி விழுந்தார். தலை, உடலில் பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மேடையில் இருந்து கீழே விழுந்த எம்எல்ஏ உமா தாமஸுக்கு தலையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. மூளை, நுரையீரலில் ரத்த உறைவு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். சில நாட்களுக்கு பிறகு வென்டிலேட்டர் நீக்கப்படும். இவ்வாறு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விஐபிக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் செய்யப்படவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக பரதநாட்டிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.