முகமது நபியின் கேலிச்சித்திரம்: கொல்லப்பட்ட பிரான்ஸ் ஆசிரியர் சந்தித்த மிரட்டல்

பிரான்சில் வெள்ளியன்று தலை வெட்டி கொல்லப்பட்ட ஆசிரியர், முகமது நபியின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரத்தை வகுப்பறையில் காட்டிய காரணத்திற்காக தொடர்ந்து மிரட்டல்களை எதிர்கொண்டு வந்தார் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

47 வயதாகும் சாமுவேல் பேட்டி என்னும் வரலாறு மற்றும் புவியியல் பாடங்களுக்கான ஆசிரியர் வெள்ளியன்று பிரான்சில் தலை வெட்டிக் கொல்லப்பட்டார்.

 

இந்த கொலை நடந்தபோது தாக்குதலாளி ‘அல்லாஹு அக்பர்’ என்று கத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

தலைநகர் பாரிஸின் வடமேற்கில் சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூஃப்லா செயின்ட் ஹொனோரின் எனும் நகரில், உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு ,தாம் பணியாற்றிய பள்ளிக்கு அருகே அவர் கொல்லப்பட்டார்.

 

கொலையாளி ஆசிரியர் சாமுவேலை கொல்லும் முன் அவர் யார் என்று அடையாளம் காட்டுமாறு மாணவர்களிடம் கேட்டார் என பிரான்ஸ் தீவிரவாத தடுப்பு காவல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

18 வயது தாக்குதலாளி

அவரை கொலை செய்த 18 வயது நபர் ரஷ்யாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் செசென்யா பகுதியைச் சேர்ந்தவர் என்று பிரான்ஸ் நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

Samuel Paty had faced an angry reaction from some to showing the cartoons

இந்த கொலை நடந்த பின்பு அவர் அந்த இடத்தில் இருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் உள்ளூர் காவல் துறையினருக்கு அங்கிருந்த பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.

 

அவரை அருகே உள்ள எராக்னி எனும் நகரத்தில் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

அப்போது அவரை சரணடையுமாறு தாங்கள் அறிவுறுத்தியபோது, அவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் அதனால் அவரை சுட்டு விட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். அந்த 18 வயதாகும் நபர் சுடப்பட்ட பின்பு சற்று நேரத்தில் உயிரிழந்தார்.

கொல்லப்பட்ட தாக்குதலாளியின் சகோதரர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் சிலர் உள்ளிட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

ஆசிரியர் சாமுவேல் கொல்லப்பட்ட பின், அவரது இறந்த உடலின் படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. கொலையாளி அல்லது அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் அப்படத்தைப் பகிர்ந்தனரா என்று தெரியவில்லை.

 

இந்த சம்பவம் பிரான்ஸ் முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளதுடன், பல போராட்டங்களையும் தூண்டியுள்ளது.

 

பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங் உள்ளிட்டோர் இந்த தாக்குதலை கண்டித்துள்ளனர்.

பிரான்சில் உள்ள இஸ்லாமிய மதகுருக்களும் இந்தக் கொலையைக் கண்டித்துள்ளனர். “அப்பாவி மக்களைக் கொல்வது, நாகரிகம் அல்ல; அது காட்டுமிராண்டித்தனம்” என தாரிக் ஓபுரு எனும் இமாம் தெரிவித்துள்ளார்.

கொலைக்கான காரணம் – ஷார்லீ எப்டோ கேலிச்சித்திரம்

கொல்லப்பட்ட ஆசிரியர் சாமுவேல் பேட்டி இந்த மாத தொடக்கத்தில் கருத்து சுதந்திரம் குறித்த வகுப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.

Police officers secure the area near the scene of a stabbing attack in the Paris suburb of Conflans-Sainte-Honorine, France. Photo: 16 October 2020.

ஷார்லீ எப்டோ வழக்கு தொடர்பான கேலிச்சித்திரங்களை வகுப்பறையில் அந்த ஆசிரியர் காண்பித்தபோது, அதனால் கோபமடைய வாய்ப்புள்ள இஸ்லாமிய மாணவர்களை வகுப்பிலிருந்து வெளியேறிக் கொள்ளலாம் என்று அந்த ஆசிரியர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

 

முகமது நபியின் கேலிச்சித்திரத்தை பதிப்பித்ததற்காக 2015ஆம் ஆண்டு தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளானது பிரெஞ்சு கேலிப் பத்திரிகையான “ஷார்லீ எப்டோ”.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி இந்த பத்திரிக்கை அலுவலகத்தில் இரண்டு இஸ்லாமியவாத தாக்குதல்காரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஷார்லீ எப்டோவின் ஊழியர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர்.

 

இந்த கேலிச்சித்திரத்தை வகுப்பறையில் காட்டியது தொடர்பாக பல இஸ்லாமிய பெற்றோர் சாமுவேல் பேட்டி மீது பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.

பெற்றோர்களில் ஒருவர் இதுகுறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டதுடன் அவரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

 

இந்த வகுப்புக்கு பின்பு அறியப்படாத நபர்களிடமிருந்து அவர் பல மிரட்டல்களை எதிர் கொண்டதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

BBC tamil

Leave A Reply

Your email address will not be published.