இவ் வருடம் சதொச ஊடாக நெல் கொள்வனவு செய்ய உத்தேசம் .
இந்த வருட நெல் அறுவடையை சதொச மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக கொள்வனவு செய்து அரிசியை உற்பத்தி செய்து விநியோகிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் அரிசித் தட்டுப்பாட்டை காலத்துக்குக் காலம் முடிவுக்குக் கொண்டு வரவும், விலையைக் கட்டுப்படுத்தவும், விவசாயிக்கு உத்தரவாத விலையை வழங்கவும் அரசாங்கம் தலையிடும் என்றும் அமைச்சர் கூறினார்.
அநுராதபுரம் ஓயா மடுவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அரச நெல் களஞ்சியசாலைகள் தொடர்பில் ஆராய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சந்தையில் நிலவும் பாரிய முரண்பாடுகளை சாதகமாக பயன்படுத்தி சில அரிசி ஆலை உரிமையாளர்கள் அசாதாரண இலாபம் ஈட்டி வருவதாகவும் அந்த முரண்பாடுகளுக்கு விடை காண அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் அங்கு தெரிவித்தார்.
நாட்டின் அரிசி உற்பத்தியில் ஏறக்குறைய முப்பது சதவீதம் பெரிய ஆலைகளால் வாங்கப்படுவதாகவும், மீதமுள்ள பொருட்கள் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலைகளால் வாங்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
நாட்டில் நிலவும் அரிசித் தட்டுப்பாட்டைக் குறைப்பதற்காக கடந்த 31ஆம் திகதி 86,000 மெற்றிக் தொன் அரிசியை இலங்கைக்கு இறக்குமதி செய்வதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதாகத் தெரிவித்த திரு.வசந்த சமரசிங்க மேலும் கருத்துத் தெரிவிக்கையில், அரிசி இறக்குமதிக்கான இலவச வரம்பு இம்மாதம் 10ம் தேதிக்கு பிறகு நீக்கப்படும்.