பாரம்பரியம், கலாசாரத்தை போற்றும் 600 காளைகளுடன் ஆரம்பமானது முதல் ஜல்லிக்கட்டு.
தமிழர்களின் வீர விளையாட்டாகவும், பாரம்பரியம், கலாசாரத்தை போற்றும் வகையிலும் ஜல்லிக்கட்டு போட்டி திகழ்கிறது. பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.
தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு மற்றும் அதிக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் என்ற பெருமையை புதுக்கோட்டை மாவட்டம் பெற்றுள்ளது. அதிக வாடிவாசல்களை கொண்டது மட்டுமில்லாமல், ஜல்லிக்கட்டு காளைகளும், காளையர்களும் அதிகமுள்ள மாவட்டமாகவும் திகழ்கிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு (2025) தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தச்சங்குறிச்சியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. புனித வின்னேற்பு அன்னை ஆலய திருவிழா மற்றும் புத்தாண்டையொட்டி இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது.
கோவில் காளை அவிழ்த்துவிடப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600 காளைகளும், 320 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.