சீனாவின் அணைகள் குறித்து இந்தியாவிடம் பேசும் அமெரிக்கா.

அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை ஆலோசகர் ஜேக் சல்லிவன் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு செல்கிறார்.

திரு சல்லிவன் ஜனவரி 5, 6ஆம் தேதிகளில் புதுடெல்லியில் இந்திய அதிகாரிகளையும் அமைச்சர்களையும் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இச்சந்திப்பின்போது, சீனா அணைகள் கட்டுவதால் இந்தியாவிற்கு ஏற்படும் சிக்கல்கள் குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் செல்வாக்கை ஆசியாவிலும் அதைத் தாண்டியும் கட்டுப்படுத்த இந்தியாதான் சரியான நாடு என்று அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் நம்புகின்றன.

இந்தப் பிரச்சினையில் இந்தியாவுக்குச் சாதகமாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இருக்கும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணையைக் கட்ட சீன அரசு ஒப்புதல் வழங்கிய விவகாரத்தில் இந்தியா தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. மேலும், சீனாவின் ஆக்கிரமிப்பு தொடர்பாக வலுவான கருத்துகளையும் முன்வைத்துள்ளது.

“சீனா, மேகாங் உள்ளிட்ட பல இடங்களில் அணைகளைக் கட்டி வருவது எங்களுக்குத் தெரியும். இது சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானது. மேலும் இந்த நதி பாயும் நாடுகளில் பருவநிலை பாதிக்கப்படும்,” என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அணையின் பின்னணி
சீனாவின் திபெத் பகுதியில் பிரம்மபுத்திரா நதியின் பெயர் யார்லங் சாங்போ என்று அழைக்கப்படுகிறது.

இந்த நதியில் புதிய அணையைக் கட்ட சீன அரசு மிக நீண்ட காலமாக திட்டமிட்டு இருந்தது. தற்போது யார்லங் சாங்போ நதியில் பல மில்லியன் டாலர் செலவில் உலகின் மிகப்பெரிய அணையைக் கட்ட சீன அரசு அண்மையில் ஒப்புதல் அளித்து உள்ளது. இந்த அணையில் 60,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

பிரம்மபுத்திரா நதியில் சீன அரசு மிகப் பெரிய அணையைக் கட்டுவது இந்தியாவுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

சீனாவின் பரப்பளவில் ஐந்தில் ஒரு பங்கு திபெத் வட்டாரம் ஆகும். ஆசியாவின் தண்ணீர்த் தொட்டி என்று அழைக்கப்படும் திபெத் பகுதி பிரம்மபுத்திரா, சட்லஜ், மஞ்சள் நதி உட்பட 10 நதிகளின் பிறப்பிடமாகும்.

Leave A Reply

Your email address will not be published.