திருமணமாகாத ஜோடிகளுக்கு தங்க அனுமதியில்லை – அதிரடியாக ரூல்ஸை மாற்றிய ஓயோ

ஹோட்டல் விடுதிகள் முன்பதிவு நிறுவனமான ஓயோ தனது பங்குதாரர்களின் ஹோட்டல்களில் திருமணமாகாத ஜோடிகளுக்கு அனுமதியில்லை எனும் புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹோட்டல் முன்பதிவு நிறுவனமான ஓயோ, தனது பங்குதாரர் விடுதிகளுக்கு புதிய வருகை விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு முதல் மீரட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய வழிகாட்டுதலின்படி, திருமணமில்லாத ஜோடிகள் இனி ஓயோ விடுதிகளில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது.

ஓயோ நிறுவனத்தின் திருத்தப்பட்ட விதிகளின்படி, ஆன்லைனில் முன்பதிவு செய்யும் ஜோடிகள் விடுதிகளுக்கு வரும்போது தங்களது உறவுமுறை குறித்த சரியான சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. மேலும், திருமணமாகாத ஜோடிகளின் முன்பதிவுகளை நிராகரிக்கும் அதிகாரத்தை தனது பங்குதாரர் விடுதிகளுக்கு ஓயோ நிறுவனம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் உள்ள தனது பங்குதாரர் விடுதிகளில் இந்த விதிமுறையை உடனடியாக அமல்படுத்த உத்தரவிட்டுள்ள ஓயோ நிறுவனம், இதற்கான வரவேற்பையும் கள நிலவரங்களையும் பொறுத்து மேலும் பல நகரங்களில் இந்த விதிமுறையை விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளதாக ஓயோ நிறுவனத்துக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

ஓயோ விடுதிகள் தொடர்பான பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீரட்டில் உள்ள சமூக அமைப்புகள் சில மாதங்களாகத் தொடர்ந்து ஓயோ நிறுவனத்திடம் கோரிக்கைகள் வைத்து வந்தனர். அதேபோல, பிற நகரங்களைச் சேர்ந்தவர்களும் திருமணமாகாத ஜோடிகளை ஓயோ விடுதிகளில் தங்க அனுமதிக்கக் கூடாது என தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, ஓயோ நிறுவனத்தின் வட இந்திய பகுதிகளுக்கான தலைவர் பவாஸ் சர்மா கூறுகையில், “விருந்தோம்பல் நடைமுறைகளை பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் கடைபிடிக்க ஓயோ உறுதியாக இருக்கின்றது. தனி நபர்களின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் மதிக்கும் அதே வேளையில், எங்கள் நிறுவனம் செயல்படும் பகுதிகளின் சட்டங்களுடனும், சமூக அமைப்புகளுடன் இணைந்து செயல்பட வேண்டிய பொறுப்பை நாங்கள் உணர்கிறோம். அதற்கேற்றபடி, காலத்திற்கேற்றவாறு எங்களின் கொள்கைகளை மதிப்பாய்வு செய்துகொண்டே இருப்போம்” என அவர் தெரிவித்தார்.

ஓயோ நிறுவனம் மீதான பழைய எண்ணத்தை மாற்றி குடும்பங்கள், மாணவர்கள், வணிகம், மத மற்றும் தனி நபர்களுக்கு உகந்த பாதுகாப்பான அனுபவத்தை வழங்கி தனது பெயரை நிலைநிறுத்தும் திட்டத்தில் இந்த முயற்சி எடுக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் நீண்ட காலம் தங்குவதற்கும் மீண்டும் முன்பதிவு செய்ய ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் காவல்துறையும் பங்குதாரர்களும் இணைந்து பாதுகாப்பான தங்கும் வசதிகள் குறித்த கருத்தரங்குகளை நடத்தி, ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடும் விடுதிகளை தடை செய்து, ஓயோ நிறுவனப் பெயரை அங்கீகாரமற்று பயன்படுத்தும் விடுதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது போன்ற முயற்சிகளை ஓயோ நிறுவனம் தொடங்கியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.