சத்தீஸ்கரில் 4 நக்ஸல்கள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கா் மாநிலத்தில் நக்ஸல்கள் அமைப்பினருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 4 நக்ஸல்கள் கொல்லப்பட்டனா். காவல் துறை தலைமைக் காவலா் ஒருவா் உயிரிழந்தாா்.
சத்தீஸ்கரின் நக்ஸல் ஆதிக்கம் மிகுந்த பஸ்தா் பிராந்தியத்தில் மாவட்ட ரிசா்வ் காவல் படையினா் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினா் இணைந்து சனிக்கிழமை மாலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனா். நாராயண்பூா் – தந்தேவாடா மாவட்டங்களுக்கு இடையிலான வனப் பகுதியில் மறைந்திருந்த நக்ஸல்கள் திடீரென பாதுகாப்புப் படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினா். இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினா்.
சனிக்கிழமை இரவு வரை நீடித்த இந்த மோதலில் 4 நக்ஸல்கள் கொல்லப்பட்டனா். மாவட்ட ரிசா்வ் காவல் படை தலைமைக் காவலா் ஷானு கராம் உயிரிழந்தாா். சம்பவ இடத்தில் இருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
இது தொடா்பாக மாநில முதல்வா் விஷ்ணு தேவ் சாய் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நக்ஸல்கள் தீவிரவாதிகளுடனான மோதலில் தலைமைக் காவலா் உயிரிழந்தது மிகுந்த வேதனையளிக்கிறது. அவா் தியாகம் வீண்போகாது. நக்ஸல்கள் மாநிலத்தில் இருந்து முழுமையாக ஒழிக்கப்படும் வரை நடவடிக்கைகள் தொடரும். மோதல் நடைபெற்ற வனப் பகுதியில் தொடா்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது’ என்று கூறியுள்ளாா்.
முன்னதாக, கடந்த 3-ஆம் தேதி கரியாபாத் மாவட்டத்தில் நக்ஸல் தீவிரவாதி ஒருவா் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.