அமரர் அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் 40வது நினைவேந்தல்!

யுத்த காலத்தில் மன்னார் மறைமாவட்டத்தில் அருட்பணியாளராக இருந்து பாதிப்படைந்த மக்களுக்கு வங்காலை பங்கிலிருந்து சேவையாற்றிக் கொண்டிருந்த அருட்பணியாளர் மேரி பஸ்ரியன் அடிகளார் அவரது வாசஸ்தலத்தில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 40வது நினைவேந்தல் வங்காலை புனித ஆனாள் பங்கு மக்களால் இன்றைய தினம் (06.01) திங்கட்கிழமை  நினைவு கூறப்பட்டது.

1985 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் யுத்தம் உச்சம் கொண்டிருந்த காலக்கட்டத்தில் அமரர் அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளார் மன்னார் மறைமாவட்ட்தின் வங்காலை பங்கு தளத்தில் பங்குத் தந்தையாக கடமைபுரிந்து கொண்டிருந்தார்.

அக்காலத்தில் யுத்தத்தில் மக்கள் உடல் ரீதியாகவும் , பொருளாதார ரீதியாகவும் பாதிப்டையும்போது துணிச்சலுடன் யாவருக்கும் தனது பணிகளை முன்னெடுத்து வந்தார்.

இந்த செயற்பாட்டை பொறுக்க முடியாத பாதுகாப்பு படையினர் 1985.01.06ந் திகதி இரவு இவரின் பங்கு மனைக்குச் சென்று இவரை சுட்டுக் கொன்றனர். 40வது நினைவேந்தல் தினத்தை திங்கள் கிழமை (06.01) வங்காலை பங்கு மக்கள் மற்றும் ஆயர் உட்பட அருட்பணியாளர்கள் துறவியர்கள் நினைவுகூர்ந்தனர்.

இன்று (06.01)காலையில் புனித ஆனாள் தேவாலயத்தில் மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் ஆண்டகை தலைமையில் அடிகளாரின் ஆன்மா சாந்திக்கான இரங்கல் கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஆலய வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள அடிகளாரின் உருவச் சிலைக்கு அருட்பணி பெப்பி சோசை அடிகளார் மாலை அணிவிக்க, ஆயர் அவர்கள் தீபம் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட முக்கியஸ்தர்களால் 40 தீபங்கள் எற்றப்பட்டன.

அத்துடன் கலந்து கொண்ட யாவரும் அடிகளாரின் உருவச் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். பங்கு தந்தை லக்கோன்ஸ் அடிகளாரின் எற்பாட்டில் நடைபெற்ற இந்சிகழ்வில் பங்கு தந்தை, ஆயர் மற்றும் மாந்தை மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி யூட் குரூஸ் அடிகளார் ஆகியோரும் இரங்கல் உரைகளை நிகழ்த்தினர்.

இறுதியில் வருடந்தோறும் நினைவுகூறும் இந்நினைவேந்தல் தினத்தில் இவ்விடத்தில் வங்காலை கத்தோலிக்க இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் இரத்ததானம் நிகழ்வும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.