இந்தூரில் பிச்சைக்காரர்கள் குறித்து துப்புக்கொடுத்தால் ரூ.1000 பரிசு!
இந்தூரில் பிச்சைக் கேட்பவர்கள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.1000 பரிசு என அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்ததற்கு பொது மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் பிச்சை எடுப்பதும் கொடுப்பதும் தடை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜன.2 அன்று மாவட்ட நிர்வாகம் பிச்சை எடுப்பவர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1000 சன்மானம் வழங்கப்படும் என அறிவித்திருந்தது.
மேலும், தகவல் கொடுக்க செல்போன் எண்களும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பிற்கு இந்தூர் மாவட்டத்தின் பொது மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுகுறித்து, அம்மாவட்ட ஆட்சியர் அஷிஷ் சிங் கூறியதாவது இந்த அறிவிப்பைத் தொடர்ந்து 200க்கும் மேற்பட்டோர் நிர்வாக எண்களுக்கு அழைத்து தகவல் கொடுத்ததாகவும் அதனை விசாரித்ததில் 12 பேர் கொடுத்த தகவல் உண்மை என உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், அந்த 12 பேரில் 6 பேருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜன.6) ரூ.1,000 பரிசு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தூரில் கொண்டுவரப்பட்ட இந்த தடையினால் பிச்சை கேட்பவரோ அல்லது கொடுப்பவரோ கண்டறியப்பட்டால் அவர்கள் மீது பாரத் நியாய் சன்ஹிதா பிரிவி 233 கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். இந்த குற்றத்தினால் அவர்களுக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படக் கூடும்.
முன்னதாக, கடந்த 4 மாதங்களில் அம்மாவட்டம் முழுவதும் நடத்திய சோதனைகளில் 400 பிச்சைக்காரர்கள் கண்டறியப்பட்டு மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், பிச்சை எடுத்த 64 குழந்தைகள் மீட்கப்பட்டு குழந்தைகள் நலக்காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய சமூகநீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டதின் மூலம் இந்தூர் உள்ளிட்ட 10 இந்திய நகரங்களை பிச்சைக்காரர்கள் அற்ற நகரமாக மாற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.