உலகில் அமைதியைக் கொண்டுவருமா 2025? – சுவிசிலிருந்து சண் தவராஜா

புதியதொரு ஆண்டில் உலகம் காலடி எடுத்து வைத்துள்ளது. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவில எனக் கூறிக் கடந்துவிட முடியாத அளவில் உலக அரசியலில் கடந்த வருடத்தின் எச்ச சொச்சங்கள் புதிய ஆண்டிலும் தொடரவே செய்யும் என்பது யதார்த்தம். 2024ஆம் ஆண்டு மூன்றாம் உலகப் போரின் விளிம்பு வரை உலகைக் கொண்டு வந்து விட்டது எனக் கூறினால் அது மிகையில்லை. உக்ரைன், பலஸ்தீனம், சிரியா என ஆயுத மோதல்கள், உயிர் இழப்புகள், சொத்து இழப்புகள் என அழிவுகளுக்குப் பஞ்சமில்லை. இது தவிர, உலகில் வேறுபல நாடுகளிலும் சிறிய அளவில் ஆயுத மோதல்கள் நடந்த வண்ணமேயே உள்ளன.
இத்தகைய பின்னணியில் நடப்புப் போர்களை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய நம்பிக்கை நட்சத்திரமாக வருங்கால அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மாத்திரமே தென்படுகின்றார். அவர் வானத்தில் இருந்து வந்து குதித்த ஒரு தேவதூதன் அல்ல என்றாலும் உலகில் தற்போது நடைபெற்றுவரும் பெரும்பாலான போர்களை நிறுத்தக் கூடிய அல்லது போர்களை நிறுத்துவதற்கான பலமான அழுத்தத்தைத் தரக் கூடிய இடத்தில் அவர் ஒருவரே உள்ளார். அவ்வாறு போர்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வாக்குறுதியை அவர் தேர்தல் பரப்புரைகளின் போது முன்வைத்திருந்தார் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம்.
ஆயிரம் நாட்களைக் கடந்தும் தொடரும் உக்ரைன் போர் பரிமாணத்தில் பெரியது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான போராக அதனைக் குறுக்கிவிட முடியாத அளவுக்கு உலகின் பெரும்பாலான நாடுகள் அந்தப் போரில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்பந்தப்பட்டுள்ளன. அணுவாயுத வல்லரசான ரஸ்யா ஒரு பக்கத்திலும் அளவிலும் பலத்திலும் சிறிய நாடான உக்ரைன் ஒருபுறம் மோதலில் ஈடுபட்டாலும், உலகின் பலம்மிக்க இராணுவ அமைப்பான நேட்டோ உக்ரைனுக்குப் பின்புல ஆதரவை வழங்கி வருகின்றது. அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் பொருண்மிய, படைத்துறை உதவிகளையும் புலனாய்வுத் தகவல்களையும் வழங்கி வருகின்றது.
இரண்டு தரப்பிலும் பெரும் உயிர் அழிவுகள், சொத்து அழிவுகள் ஏற்பட்டுள்ளன. இலட்சக் கணக்கான மக்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இடம்பெயர்ந்து உள்ளனர். இந்த அவலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட முடியாத அளவில் மேற்குலகின் பொருண்மிய மற்றும் படைத்துறை உதவிகள் உக்ரைன் அரசுக்கு முட்டுக்கொடுத்து வருகின்றன. தற்போதைய நிலையில் ஒரு பக்கம் ரஸ்யா மட்டுமே தனித்து நின்று போரை முன்னெடுத்து வருகின்ற போதிலும், போர் தொடருமானால் ரஸ்யா சார்பில் மேலும் பல நாடுகள் எதிர்காலத்தில் களத்தில் இறங்கும் அறிகுறி தென்படுகின்றது. அவ்வாறான ஒரு நிலை உருவாகுமானால் உக்ரைன் போர் உலகப் போராக மாறுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன.
தான் பதவியேற்றால் உக்ரைன் போர் 24 மணி நேரத்தில் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என ட்ரம்ப் அறிவித்து உள்ளார். தனது திட்டத்தை நிறைவேற்றுவதற்கான காய் நகர்த்தல்களிலும் அவர் ஈடுபட்டு வருகின்றார். மூன்று வருட காலமாகத் தொடரும் ஒரு போரை மந்திரத்தால் மாங்காய் விழச் செய்வது போல் 24 மணி நேரத்தில் முடிவுக்குக் கொண்டு வருவது சாத்தியம் அற்றது என்பதே யதார்த்தம். ஆனால் பொருண்மிய மற்றும் படைத்துறை உதவிகளில் அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் உக்ரைன் அவை இரண்டும் தடைப்பட்ட மறுகணமே தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்படும் என்பது உண்மை. இத்தகைய ஒரு சூழலை அனுசரித்து தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி முன்வராவிட்டால் அவரது பதவி பறிக்கப்படும் அபாயமும் உள்ளது.
அத்தகைய ஒரு நிலை உருவாவதற்கு இடையில் எவ்வளவு உதவிகளை உக்ரைனுக்கு வழங்க முடியுமோ அத்தனையையும் வழங்கிவிட்டுப் பதவியைக் கையளிக்கும் நிலைப்பாட்டுன் நடப்பு ஜனாதிபதி ஜோ பைடன் செயற்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது. அமெரிக்கா மட்டுமன்றி அதன் நேச நாடுகளான யேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகியவையும் உக்ரைனுக்கான தமது உதவிகளை அதிகரித்து இருப்பதையும் பார்க்க முடிகின்றது.
மறுபுறம், வாக்குறுதி அளித்தபடி தான் சொன்னதை ட்ரம்ப் நிறைவேற்றுவாரா என்பதுவும் பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியது அவசியம்.
அதேவேளை, பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கும் கொடூரமான தாக்குதல்களும் ஒரு வருடத்தையும் கடந்து தொடர்கின்றது. அமெரிக்கா நினைத்தால் இந்தத் தாக்குதல்கள் அடுத்த நொடியிலேயே நிறுத்தப்படக் கூடும். அதனை அமெரிக்கா செய்யுமா என்பது மிகப் பாரிய கேள்வி. இஸ்ரேலைப் பொறுத்தவரை அமெரிக்கா ஆயுத தளபாட மற்றும் பொருண்மிய உதவிகளை மாத்திரம் இஸ்ரேலுக்கு வழங்கவில்லை. மாறாக இஸ்ரேலுக்கு ஒரு ஆபத்து என்றவுடன் நேரடியாகக் களத்தில் இறங்கி தாக்குதல்களைக் கூட நடத்துகின்றது. இத்தகைய உறவு உள்ள நிலையில் அமெரிக்கா நினைத்தால் இஸ்ரேலின் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தலாம்.
அமெரிக்க அதிகார மையம் என்பது தனியே ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை சார்ந்த விடயம் மட்டுமல்ல. அதற்கும் அப்பால் செல்வாக்குமிக்க உயர் குழாம் ஒன்றும் உள்ளது. பெரும் வர்த்தகர்கள், ஆயுத வியாபாரிகள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோர் அடங்கிய இந்தக் குழாமில் யூதர்களின் ஆதிக்கம் அதிகம். அரசின் அனைத்து முடிவுகளிலும் இவர்களின் தலையீடு இருப்பது சகஜம். இந்நிலையில், ட்ரம்ப் நினைத்தால் கூட பலஸ்தீனப் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியுமா என்பது சந்தேகத்துக்குரியதே.
சிரியாவில் தீவிரவாதக் குழுக்கள் ஆட்சியைக் கைப்பற்றிய நாள் முதலாக இஸ்ரேல் தனது மேலாதிக்கத்தை நிறுவும் வகையிலான தாக்குதல்களை நடத்தி வருகின்றது. ஏற்கனவே ஆக்கிரமித்து வைத்துள்ள சிரியாவுக்குச் சொந்தமான கோலான் குன்றுப் பிரதேசத்தில் மேலும் நிலங்களை ஆக்கிரமித்து வருகின்றது. அமெரிக்காவும் தனது பங்குக்கு மேலதிக படைகளையும் கனரக ஆயுதங்களையும் அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒன்றுக்கு ஒன்று முரணான சித்தாந்தங்களைக் கொண்ட பல்வேறு குழுக்கள் இணைந்து ஆட்சியைக் கைப்பற்றி உள்ள நிலையில் குழுக்களுக்கு இடையே நிலவும் முரண்பாடுகள், ஆட்சியைக் கைப்பற்றிய குழுக்களின் செயல்பாடுகள் காரணமாக உள்நாட்டில் இடம்பெற்றுவரும் ஆயுத ரீதியான மோதல்கள் என சிரியா கொந்தளிப்பான நிலையில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி லிபியா போன்ற தீர்க்கமான அரசாங்கம் ஒன்று இல்லாத நிலை சிரியாவில் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தனது உடனடி எதிரிகள் என இஸ்ரேல் வகைப்படுத்தி உள்ள பலஸ்தீன அமைப்பான ஹமாஸ், லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா போன்றவற்றை முடிந்தளவு அதிகம் இஸ்ரேல் ஒடுக்கி விட்டது. தற்போது தலையிடி தந்து கொண்டிருக்கும் யேமனின் ஹவுத்தி தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை இஸ்ரேல் முன்னெடுத்து வருகின்றது. இந்த வரிசையில் அடுத்தது ஈரான் மீதான நேரடித் தாக்குதல்களே எஞ்சியுள்ளது. அவ்வாறான ஒரு தாக்குதலை இஸ்ரேல் மேற்கொள்வதாயின் அதற்கு அமெரிக்காவின் அங்கீகாரமும் அனுசரணையும் தேவை. அதனை வழங்கும் இடத்தில் ட்ரம்ப் அமரும் போது உலகின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
வாக்குறுதி அளித்ததைப் போன்று ட்ரம்ப் நடந்து கொண்டு போர்களை முடிவுக்குக் கொண்டு வருவாரானால் புதிய ஆண்டில் உலகம் ஓரளவேனும் நிம்மதி பெறும் வாய்ப்பு உள்ளது. அதனை அவர் செய்வாரா? அவ்வாறு அவர் செய்வதற்கு இடமளிக்கப்படுமா? இவை பெறுமதியான கேள்விகள்.